• May 17, 2024

அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என்ற முடிவில் மாற்றம் இல்லை” டி. ஜெயக்குமார் பேட்டி 

 அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என்ற முடிவில் மாற்றம் இல்லை” டி. ஜெயக்குமார் பேட்டி 

தினத்தந்தி அதிபர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 88 வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள அவரது இல்லத்தில் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த  அவரின் உருவ படத்துக்கு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி வருமாறு :-

அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என்ற கருத்தில் எந்தவிதமான மாறுபட்ட கருத்தும் இல்லை. நாளை ( 25)  எம்ஜிஆர் மாளிகையில், கழக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற இருக்கிறது. கூட்டம் நடைபெறவுள்ள சூழலில் என்னால், வேறு எந்த கருத்தும் தெரவிக்க இயலாது.

 ஒருநாள் காத்திருந்தால், மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை ஊடகங்களில் அறிவிக்கிறேன்.

தமிழகத்தில் இரண்டரை லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த குறுவை விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. கழக பொதுச் செயலாளர் ஏக்கருக்கு ரூ.35,000 வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். ஆனால் அரசு யானை பசிக்கு சோளப்பொறி போல ஒரு நிவாரணத் தொகையை அறிவித்துள்ளனர்.

காவிரியில் இருந்து பெற்று தர வேண்டிய தண்ணீரை தமிழக அரசு பெற்று தராததால் டெல்டா மாவட்டங்களில் லட்சக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்ட விளை நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. காவிரி நீர் நிலைகளில் 90 விழுக்காடு தண்ணீர் இருந்தும், தமிழகத்துக்கு தேவையான தண்ணீரைப் பெற்றுத்தர தமிழக முதலமைச்சர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

தமிழக அரசு உரிய நேரத்தில் கர்நாடகத்திடம் இருந்து தண்ணீரை கேட்டுப் பெறாத காரணத்தால், இரண்டரை லட்சம் ஏக்கர் அளவில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. அதே போல், கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து டெங்குவால் 4000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த அரசு தூங்கிக் கொண்டிருக்கிறது. சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் இருக்கின்றன.

எனவே, நாளை ( 25)  மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ள நிலையில், இப்போது எந்தக் கருத்தையும் கூறுவது சரியாக இருக்காது. கூட்டணியைப் பொறுத்தவரையில், அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என்று கடந்த 18-ம் தேதி எடுத்த முடிவில் மாற்றம் இல்லை”.

இவ்வாறு டி. ஜெயக்குமார் கூறினார்.

தொடர்ந்து செய்தியாளர்கள் அதிமுக கூட்டணியில் பாஜக இல்லையென்றால் டெல்லி சென்று அதிமுக தலைமை நிலைய செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் எதற்காக பாஜக தலைவர்களை சந்தித்தனர் என்ற கேள்வி எழுப்பினர்.

அதற்கு டி. ஜெயக்குமார், தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழல் குறித்து விளக்கியதாக பதில் அளித்தார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *