• May 17, 2024

மறைந்த தலைவர்களை கொச்சைப் படுத்துவதை நிறுத்த வேண்டும்; அண்ணாமலைக்கு டி.ஜெயக்குமார் வேண்டுகோள்

 மறைந்த தலைவர்களை கொச்சைப் படுத்துவதை நிறுத்த வேண்டும்; அண்ணாமலைக்கு டி.ஜெயக்குமார் வேண்டுகோள்

முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா 115 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் சென்னை அண்ணா சாலை மற்றும் வாலாஜா சாலை சந்திப்பில் உள்ள அண்ணா  சிலையின் கீழ்  அலங்கரித்து வைக்கப்பட்ட உருவப்படத்திற்கு கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

 இந்நிகழ்ச்சியில் அ.தி.மு.க.  அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன், பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், துணைப் பொதுச் செயலாளர் கே.பி முனுசாமி, தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி வேலுமணி முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன்,கே.ஏ செங்கோட்டையன், டி.ஜெயக்குமார், பா வளர்மதி, அக்ரி எஸ். எஸ்.கிருஷ்ணமூர்த்தி, சேவூர் ராமச்சந்திரன், கோகுல இந்திரா அப்துல் ரஹீம், சோமசுந்தரம், பி.வி ரமணா,பெஞ்சமின் டாக்டர் சரோஜா,மாபா பாண்டியராஜன் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் மாவட்ட கழகச் செயலாளர்கள், தலைமை கழக நிர்வாகிகள்,பகுதி வட்ட கழக நிர்வாகிகள் மற்றும் கழகத்தின் பல்வேறு பிரிவுகளை சேர்ந்த நிர்வாகிகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்

முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

தாழ்ந்த தமிழகத்தை தலைநிமிர செய்து இயல்,இசை, நாடக தமிழில் புலமையும், பன்மொழி தன்மையும் பெற்றவர்.ஆங்கிலம் உட்பட பல மொழிகளில் சரளமாக பேசுபவர். தமிழன் பெருமையை உலகத்திற்கு உணர்த்தியவர் பேரறிஞர் அண்ணா .

உலகம் உள்ள வரை நிலைத்து நிற்க கூடிய வகையில் பேச்சு ஆற்றல், எழுத்து ஆற்றல் கொண்டவர். ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்பதற்கு ஏற்ப உழைத்தவர். அண்ணா வழியில் அ.தி.மு.க.  வெற்றி நடைபோடுகிறது.

எடப்பாடி பழனிச்சாமி அமித்ஷா சந்திப்பு என்பது நாடாளுமன்ற தேர்தல் வர உள்ள நிலையில் கூட்டணி கட்சி சந்திப்பு காலம் காலமாக இருக்கும் நடைமுறை தான். எங்கள் கூட்டணியில் பா.ஜ.க. உள்ளது, அதனால் கூட்டணி கட்சி தலைவரை பார்த்தார்..தேர்தல் அறிவித்த பிறகு கூட்டணி குழு கூடி தொகுதி பங்கீடு குறித்து பேசுவார்கள்.

அமலாக்கத்துறையின் சோதனை தகவல் அடிப்படையில் நடக்கிறது. அவர்கள் கடமையை செய்கிறார்கள். அ.தி.மு.க. தொண்டர்கள் கொதித்து எழும் நிலையில் உள்ளனர்.அண்ணாமலை அவர் கட்சிக்காக என்ன வேண்டுமானாலும் பேசட்டும், மறைந்த தலைவர்களை கொச்சைப் படுத்துவதை நிறுத்த வேண்டும்.

முத்துராமலிங்க தேவர், அண்ணா நெருங்கிய நண்பர்கள்.முத்துராமலிங்க தேவர் மீது அ.தி.மு.க. நன்மதிப்பு கொண்டு உள்ளது.அண்ணா பற்றி பேசியதற்கு அ.தி.மு.க. சார்பில்  கண்டனம் தெரிவிக்கிறோம், அவர் வருத்தம் தெரிவிக்க வேண்டும். நடக்காத விசயத்தை சொல்லி அண்ணாவின் பெயரை கலங்கப்படுத்தக் கூடாது.

தமிழ்நாட்டில் டெங்குவை கட்டுப்படுத்த நடவடிக்கை இல்லை, அமைச்சர் 14 கிலோ மீட்டர் நடந்து சென்று மக்களை பார்த்தார் என்று செய்தி வருகிறது.எது தேவையோ அதை செய்ய வேண்டும். மின்சார கட்டணம், சொத்து வரி, பால் கட்டணம் என எல்லாவற்றிற்கும் விலையை ஏற்றி விட்டு, தமிழக மக்களுக்கு யானை பசிக்கு சோள னபொறியாக உள்ளது.

கல்விக் கடன் ரத்து என்று சொன்னார்கள் செய்யவில்லை, நகை கடன் முழு தள்ளுபடி என்று சொல்லி 10 % தான் செய்தார்கள். தேர்தல் வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றாமல், முழு பூசணிக்காயை அல்ல ஒரு பாறாங்கல்லையே சோற்றில் மறைத்துள்ளார்கள். அத்தகைய வல்லமை படைத்த கட்சி திராவிட முன்னேற்ற கழகம்.

இவ்வாறு டி.ஜெயக்குமார் கூறினார்

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *