• May 20, 2024

நெய்வேலியில் தடையை மீறிய அன்புமணி ராமதாஸ் கைது; வன்முறையை தடுக்க போலீஸ் துப்பாக்கி சூடு

 நெய்வேலியில் தடையை மீறிய அன்புமணி ராமதாஸ் கைது; வன்முறையை தடுக்க போலீஸ் துப்பாக்கி சூடு

நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தின் இரண்டாவது சுரங்க விரிவாக்கப் பணிக்கு நிலம் கையகப்படுத்தும் பணி தீவிரமடைந்து வருகிறது. அந்த வகையில் கடலூர் மாவட்டம் மேல்வளையமாதேவி கிராமத்தில் 8 ஏக்கர் பரப்பளவில் விளைநிலங்களில் பொக்லைன் இயந்திரங்கள் கொண்டு கால்வாய் வெட்டும் பணி கடந்த இரு நாட்களாக நடைபெற்றது.

விளைநிலங்களில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்களை 20க்கும் மேற்பட்ட ராட்சத மண் வெட்டும் வாகனங்கள் மூலம் அழித்து கால்வாய் வெட்டுவதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் நெற்பயிர்கள் அழிக்கப்பட்டு வருவதாகவும், விவசாயிகள் தெரிவித்தனர்.

இந்த பதற்றமான சூழலில் டி.ஐ.ஜி. ஜியாவுல் ஷேக் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில் என்.எல்.சி நிர்வாகம் தரப்பில் விளைநிலங்கள் கையகப்படுத்துவதைக் கண்டித்து பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில், நெய்வேலி ஆர்ச்கேட் பகுதியில் உள்ள என்.எல்.சி. நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் என்.எல்.சி நிர்வாகத்தை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.

அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க இன்று மாலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் உள்ள மதுபானக் கடைகளை திறக்க தடை விதித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்ட பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். பா.ம.க.வினரை கைது செய்ய வந்த காவல்துறை வாகனத்தின் கண்ணாடி உடைக்கப்பட்டது. இந்நிலையில் பா.ம.க. முற்றுகை போராட்டம் வன்முறையாக மாறியது. போராட்டத்தை கலைக்க, காவல்துறையினர் தண்ணீரை பீய்ச்சியடித்து தடியடி நடத்தி போராட்டக்காரர்களை கலைத்தனர். தடியடி நடத்தி கலைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொண்டர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். மேலும் போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியதால் கூட்டத்தினர் கலைந்து ஓடினர்..

இந்த சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் என்.எல்.சி. நுழைவு வாயிலில் வன்முறை நடந்த இடத்தில் வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் ஆய்வு மேற்கொண்டார். வன்முறையில் சில காவலர்கள் காயமடைந்த நிலையில், போராட்டம் நடந்த இடத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *