• February 7, 2025

மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ஆயத்த ஆடை உற்பத்தி பிரிவு; ஆட்சியர் செந்தில்ராஜ்  தகவல்

 மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ஆயத்த ஆடை உற்பத்தி பிரிவு; ஆட்சியர் செந்தில்ராஜ்  தகவல்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினரின் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படுத்துவதற்கும் அவர்களது வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கும் பொருளாதார வளர்ச்சி இன்றியமையாததாகும். இதனை நன்கு உணர்ந்து, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோரின் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் மக்களுக்கு சுயதொழில் தொடங்க கடன் உதவி அளிக்கப்பட்டு வருகிறது.

பொருளாதார மேம்பாட்டு திட்டங்களின் கீழ், இவ்வகுப்பைச் சார்ந்த ஏழை, எளிய மக்களுக்கு பித்தளை சலவைப் பெட்டிகள் மற்றும் மின்மோட்டார்கள் பொருத்தப்பட்ட தையல் எந்திரங்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. இன்றைய காலமாற்றத்தை கருத்தில்கொண்டு, ஆயத்த ஆடை அலகுகள் அமைப்பதற்கும், நவீன முறை சலவையகங்கள் (Modern Laundry Units) அமைப்பதற்கும் நிதியுதவி அளிக்கும் திட்டங்கள் புதிதாக வகுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. வீடற்ற மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்படுகின்றன.

அதன்படி தையல் அனுபவம் பெற்ற சுய உதவிக்குழு உறுப்பினர்கள் ஒருங்கிணைந்து சுயமாக தொழில் செய்து பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதற்காக ஆயத்த ஆடை உற்பத்தி பிரிவு அமைப்பதற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்திலேயே முதன் முதலாக தூத்துக்குடி மாவட்டத்தில் தையல் பயிற்சி பெற்ற ஸ்காட் வானவில் மகளிர் சுய உதவிக்குழு மற்றும் மேலத்தட்டபாறை முத்தமிழ் மகளிர் சுய உதவிக்குழு தேர்வு செய்யப்பட்டு, தலா ரூ.3 லட்சம் மதிப்பில் ஆயத்த ஆடை உற்பத்தி பிரிவுகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதன் மூலம் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், தங்கள் பொருளாதாரத்தை மேம்படுத்தி வருகின்றனர்.

மேலும் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றது முதல் கடந்த மாதம் 30-ந் தேதி வரை பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறையின் மூலம் 41 ஆயிரத்து 140 பயனாளிகளுக்கு ரூ.14 கோடியே 64 லட்சம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு ஆட்சியர் செந்தில்ராஜ்  கூறி உள்ளார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *