கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் ஆடிப்பூர வளைகாப்பு விழா 21-ந் தேதி நடக்கிறது
![கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் ஆடிப்பூர வளைகாப்பு விழா 21-ந் தேதி நடக்கிறது](https://tn96news.com/wp-content/uploads/2023/07/358575485_801565691525637_5752902412665540586_n-850x560.jpg)
உலக மக்களைக் காப்பதற்காக அம்பாள், சக்தியாக உருவெடுத்த தினம் ஆடிப்பூரம் என்று கூறப்படுகிறது. ஆடிப்பூரம் விழா சைவ ஆலயங்களில் மட்டுமல்லாது, வைணவ தலங்களிலும் வெகு சிறப்பாக நடைபெறும். ஏனெனில் ஆண்டாள் அவதரித்த தினம் ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திரம் ஆகும். பூமா தேவியே ஆடிப்பூர நாளில் ஆண்டாளாக அவதரித்தாள் என்கின்றன புராணங்கள்.
சித்தர்களும், முனிவர்களும் இந்த நாளில்தான் தங்களுடைய தவத்தை தொடங்குவதாகவும் புராணங்கள் எடுத்துரைக்கின்றன. எம்பெருமானின் பல்வேறு அம்சங்களான சங்கு, சக்கரம், வில், கதை, வாள் போன்ற ஆயுதங்கள் மட்டுமே ஆழ்வார்களாக அவதரித்த தருணத்தில், பூமாதேவியும் ஆடிப்பூர நாளில் ஆண்டாளாக அவதரித்தாள்
மானிடத்தை இன்னல்களில் இருந்து மீட்பதற்கு உலகன்னை இவ்வுலகிலே தோன்றிய நாள் ஆடிப்பூரம் எனக் கருதுவர். இந்நாளில் தேவி உலகிற்கு விஜயம் செய்து மக்களுக்கு அருள் புரிவாள் என்று நம்பப்படுகிறது.
வெள்ளிக்கிழமை அன்று வரும் ஆடிப்பூரம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்நாளிலேயே ஆண்டாள் பிறந்ததாக கருதப்படுகிறது. அதனால் ஆடிப்பூரத்தன்று வைணவ கோவில்களில் ஆண்டாளுக்கு சிறப்பு பூஜை நடைபெறும். திருமணமாகாத பெண்கள் இந்நாளில் ஆண்டாளை கும்பிட்டால் அவர்களுக்கு விரைவில் திருமணமாகும் என்பது நம்பப்படுகிறது.
.
சிறப்புமிக்க ஆடிப்பூர வளைகாப்பு விழா கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் வருகிற 21-ந்தேதி(வெள்ளிக்கிழமை) மாலை 5.30 மணிக்கு நடக்கிறது.
வளைகாப்பு விழாவிற்கான வளையல், மஞ்சள் கயிறு மற்றும் மஞ்சள் கிழங்கு, பச்சப்பயறு வாங்கி கொடுத்து பக்தர்கள் விழாவில் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்று செல்ல வேண்டும் என்று கோவில் செயல் அலுவலர் வெள்ளைச்சாமி, உதவி ஆணையர் சங்கர் ஆகியோர் அழைப்பு விடுத்துள்ளனர்.
பக்தர்கள் காணிக்கையாக தரும் வளையல்களை அம்மனுக்கு சாற்றிவிட்டு பின்னர் அதை மங்கள பிரசாதமாக தருவார்கள். அம்மனுக்கு படைத்த வளையலை கர்ப்பிணிகள் கைகளில் அணிந்துகொண்டால், சுகப்பிரசவம் நிகழும். பிள்ளை வரம் வேண்டுபவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கை கூடும் என்பது நம்பிக்கை
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)