நடிப்பதை சில காலம் நிறுத்தி விட்டு அரசியலில் ஈடுபட விஜய் திட்டம்?

 நடிப்பதை சில காலம் நிறுத்தி விட்டு அரசியலில் ஈடுபட விஜய் திட்டம்?

நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் அரசியல் இயக்கமாக மாறி வருகிறது. அரசியலுக்கு வருவதாக அவர் வெளிப்படையாக அறிவிக்காவிட்டாலும், அவரது இயக்கம் மற்றும் அவரது செயல்பாடுகளால் விரைவில் விஜய் அரசியலுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள், பொதுமக்கள் இடையே அதிகரித்துள்ளது.

சென்னை அருகே பனையூரில் உள்ள அலுவலகத்தில் இயக்க நிர்வாகிகளை அவ்வப்போது சந்திக்கும் விஜய், இயக்கத்தை விரிவுபடுத்த பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகிறார். அவரது அறிவுறுத்தலின்படி, மக்கள் இயக்க நிர்வாகிகள் பல்வேறு நலத்திட்ட பணிகளை செய்து வருகிறார்கள்.

சமீபத்தில் தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் தொகுதி வாரியாக 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளை நடிகர் விஜய் சந்தித்து ஊக்கத்தொகை வழங்கி கவுரவித்தார். ஓட்டுக்கு பணம் வாங்க கூடாது என மாணவர்கள் மத்தியில் பேசியிருந்தார்.

இந்தநிலையில், 2025-ம் ஆண்டு முழுவதும் மக்கள் இயக்கம் மற்றும் களப்பணிகளில் நடிகர் விஜய் கவனம் செலுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அடுத்தாண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் விஜய் கவனம் செலுத்த போவதில்லை எனவும் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள 2026-ம் ஆண்டில் மாநாடுகள் நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.

விஜய்யின் அரசியல் பயணம் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியாக உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. தற்போது லியோ படத்தில் நடித்து வரும் விஜய் வெங்கட்பிரபு உடனான தனது 68-வது படத்திற்கு பின் ஓய்வெடுக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
2024 மே மாதத்திற்குள் வெங்கட்பிரபு உடனான படத்தை முடிக்க விஜய் திட்டமிட்டுள்ளதாகவும் நடிப்பதை சிறிது காலம் நிறுத்திவிட்டு களப்பணிகளில் விஜய் கவனம் செலுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எதையும் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என ஆலோசனை கூட்டத்தில் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு விஜய் அறிவுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *