கோவில்பட்டி புதுக்கிராமத்தில் தரமற்ற சாலையா? பணியை நிறுத்தி பா.ஜனதா போராட்டம்
கோவில்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட புதுக்கிராமத்தில் ரூ.48 லட்சம் மதிப்பீட்டில் 1.5 கிலோமீட்டர் தூரத்திற்கு சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த தார் சாலை அமைக்கும் பணிகள் தரமானதாக இல்லை என்றும் தரமற்ற முறையில், பெயரளவிற்கு சாலை அமைக்கப்படுவதாகவும் புகார் எழுந்தது. மேலும் சாலை அமைக்க பயன்படுத்தப்படும் ஜல்லி கற்கள் கையில் அள்ளும் அளவிற்கு தான் இருப்பதாக கூறி அப்பகுதி பொது மக்கள் மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் இன்று பகலில் திடீரென பணிகளை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தரமான சாலை அமைக்க வேண்டும் என்று அவர்கள் கோஷம் எழுப்பினார்கள். இது குறித்து தகவல் கிடைத்ததும் நகராட்சி அதிகாரிகள், காவல்துறையினர் விரைந்து வந்தனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.
தற்பொழுது சாலை அமைப்பதற்கான ஆரம்ப கட்ட பணிகள் தான் நடந்து வருகிறது. தரமான முறையில் சாலை அமைக்கப்படும், இதில் எந்த வித தவறும் ஏற்படாது என்று என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். இதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தினை கைவிட்டனர்.