திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 211.546 கிலோ தங்கத்தை உருக்கி தங்கக் கட்டிகளாக மாற்றி வங்கியில் முதலீடு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய தங்க நகைகளில் திருக்கோயிலுக்கு பயன்படாத நகைகளை உருக்கி, தங்கக் கட்டிகளாக மாற்றப்பட்டது.
பின்னர் தங்க முதலீட்டுப் பத்திரத்தில் முதலீடு செய்திடும் வகையில் 211.546 கிலோ எடையுள்ள பிரித்தெடுக்கப்பட்ட தங்கத்தை , உயர்நீதிமன்ற நீதியரசர் (ஓய்வு) செல்வி மாலா முன்னிலையில் அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன் பி.கே.சேகர்பாபு ஆகியோர் பாரத ஸ்டேட் வங்கி மண்டல பொது மேலாளர் கோவிந்த் நாராயணன் கோயலிடம் ஒப்படைத்தனர்.
பின்னர் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்ததாவது:-
2021-2022-ஆம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையில், “கடந்த 10 ஆண்டுகளாக திருக்கோயில்களில் காணிக்கையாக வரப்பெற்ற பலமாற்று பொன் இனங்களில், திருக்கோயிலுக்கு தேவைப்படும் இனங்கள் நீங்கலாக, ஏனைய இனங்களை மும்பையில் உள்ள ஒன்றிய அரசுக்கு சொந்தமான தங்க உருக்காலையில் உருக்கி, சொக்கத் தங்கமாக மாற்றி, திருக்கோயிலுக்கு வருவாய் ஈட்டும் வகையில் வங்கிகளில் முதலீடு செய்து, அதிலிருந்து வரும் வட்டி மூலமாக திருக்கோயில்களுக்கு திருப்பணிகள் மேற்கொள்ளப்படும். இப்பணிகளைக் கண்காணிப்பதற்கு 3 மண்டலங்கள் ஏற்படுத்தப்பட்டு, ஓய்வு பெற்ற நீதியரசர்கள் தலைமையிலான குழுக்கள் மூலம் இப்பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனை செயல்படுத்தும் விதமாக, திருக்கோயில்களில் பயன்பாட்டில் இல்லாத பலமாற்றுப் பொன் இனங்கள் பிரித்தெடுத்து உருக்கி சுத்த தங்கக்கட்டிகளாக மாற்றி முதலீடு செய்திடும் வகையில் சென்னை, திருச்சி, மதுரை ஆகிய மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டு ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதியரசர் துரைசாமி ராஜு மற்றும் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர்கள் ரவிச்சந்திர பாபு, ஆர். மாலா ஆகியோர் தலைமையில் தனிக்குழுக்கள் அமைக்கப்பட்டன. இப்பணிகளை கடந்த 13.10.2021 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் காணொலிக் காட்சி வாயிலாகத் தொடங்கி வைத்தார்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வட்டம், இருக்கன்குடி, மாரியம்மன் திருக்கோயில், திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம், பவானியம்மன் திருக்கோயில், திருவேற்காடு, தேவி கருமாரியம்மன் திருக்கோயில் மற்றும் மாங்காடு, காமாட்சியம்மன் திருக்கோயில் ஆகிய திருக்கோயில்களுக்கு பக்தர்களால் உண்டியலிலும், காணிக்கையாகவும் செலுத்தப்பட்ட பலமாற்றுப் பொன் இனங்கள் உருக்கி சுத்த தங்கமாக மாற்றப்பட்டு பாரத ஸ்டேட் வங்கியில் தங்க முதலீட்டுப் பத்திரத்தில் முதலீடு செய்யப்பட்டு, இதன் மூலம் கிடைக்கப் பெறும் வட்டித்தொகை அந்தந்த திருக்கோயில்களின் மேம்பாட்டிற்காக செலவிடப்பட்டு வருகிறது.
அதனைத் தொடர்ந்து, திருச்செந்தூர், சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு பக்தர்களால் காணிக்கையாக செலுத்தப்பட்ட பலமாற்று பொன் இனங்களிலிருந்து கற்கள், அழுக்கு, அரக்கு மற்றும் இதர உலோகங்களை நீக்கி, நிகர பொன்னினங்களை கணக்கிடும் பணியானது ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் செல்வி ஆர். மாலா முன்னிலையில் நடைபெற்றது.
அதன்படி திருக்கோயிலுக்கு பயன்படுத்த இயலாத நிலையில் கிடைக்கப்பெற்ற பலமாற்று பொன் இனங்கள் மொத்த எடை 211.546 கிலோவை உருக்கி, சுத்தத் தங்கமாக மாற்றி தங்க முதலீட்டு பத்திரத்தில் முதலீடு செய்யும் வகையில் இன்று பாரத ஸ்டேட் வங்கியிடம் ஒப்படைக்கும் வகையில் தூத்துக்குடி மண்டல மேலாளர் எச்..ஆனந்திடம் வழங்கப்பட்டது.
இவை மும்பையில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான தங்க உருக்காலையில் உருக்கி சுத்தத் தங்க கட்டிகளாக பெற்று அதனை பாரத ஸ்டேட் வங்கியின் தங்க முதலீட்டுப் பத்திரத்தில் முதலீடு செய்யப்படும். அதன் மூலம் கிடைக்கப்பெறும் வருவாய் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் மேம்பாட்டிற்கு பயன்படுத்தப்படும்.
இவ்வாறு அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.