கோவில்பட்டியில் செயின் பறிப்பில் ஈடுபட்ட வட மாநில கும்பல் சிக்கியது; திருட்டு பணத்தில் சினிமா தயாரிப்பு
![கோவில்பட்டியில் செயின் பறிப்பில் ஈடுபட்ட வட மாநில கும்பல் சிக்கியது; திருட்டு பணத்தில் சினிமா தயாரிப்பு](https://tn96news.com/wp-content/uploads/2023/06/IMG_20230616_222746.jpg)
கோவில்பட்டி பங்காளத்தெருவைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவரது மனைவி பூமாரி என்ற முத்துமாரி (வயது 57). இவர் கடந்த மாதம் 15-ந்தேதி இரவு தனது வீட்டின் முன்பு அமர்ந்து இருந்த போது, மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்மநபர்கள் பூமாரி கழுத்தில் அணிந்து இருந்த 12 பவுன் தங்க நகையை பறித்து விட்டு சென்றனர்.
அதே போன்று கோவில்பட்டி ஏ.கே.எஸ் தியேட்டர் சாலையில் நடந்து சென்று கொண்டு இருந்த கதிரேசன் கோவிலை சேர்ந்த வெள்ளத்தாய் (44) என்பவரிடம் மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்மநபர்கள் 6 பவுன் தங்க சங்கிலியை பறித்து தப்பிச்சென்றனர். இந்த 2 வழிப்பறி சம்பவங்கள் குறித்து கோவில்பட்டி கிழக்கு மற்றும் மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.
மேலும் 2 இடங்களில் பதிவாகி இருந்த சி.சி.டி.வி. காட்சிகளை போலீசார் குற்றவாளிகளை தேடினர். இந்த வழிப்பறி சம்பவம் தொடர்பாக திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி, பச்சையங்கோட்டை காந்தி நகரில் வசித்த பீருஷா மகன் சனாபுல்லா (42), அவரது மனைவி ரசியா (38), மகன் ஜாபர் (19) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
![](https://tn96news.com/wp-content/uploads/2023/06/school-admission-1-1-1-1-1024x1024.jpg)
கைது செய்யப்பட்டுள்ள 3 பேரும் மராட்டிய மாநிலத்தை பூர்வீமாக கொண்டவர்கள். தற்பொழுது திண்டுக்கல் மாவட்டத்தில் வசித்து வருகின்றனர். குடும்பத்தினர் ஒன்றிணைந்து திருட்டு, வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டுவந்தாக கூறப்படுகிறது.
தந்தையும், மகனும் மோட்டார் சைக்கிளில் சென்று வழிப்பறி, திருட்டில் ஈடுபட்ட நகைகளை விற்பனை செய்து அதன் மூலம் கிடைக்கும் வருவாயில் சனாபுல்லா நான் அவன் தான் என்ற திரைப்படம் எடுத்து உள்ளதாகவும், அதனை விரைவில் வெளியே திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு இருந்த நிலையில் கோவில்பட்டியில் வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த திரைப்படத்தில் சனாபுல்லா முக்கிய வேடத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. மோட்டார் சைக்கிள் ஓட்டுவது ஒருவர், நகையை பறித்தும் மற்றொருவர் என மாற்றி, மாற்றி மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று காவல்துறையினரை குழப்பி வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
திரைப்படம் எடுக்க குடும்பமே வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)