தொழில் முனைவோருக்கான மானிய கடன் திட்டங்கள்; கோவில்பட்டி கூட்டத்தில் தொழில் மைய பொதுமேலாளர் சொர்ணலதா விளக்கம்

 தொழில் முனைவோருக்கான மானிய கடன் திட்டங்கள்; கோவில்பட்டி கூட்டத்தில் தொழில் மைய பொதுமேலாளர் சொர்ணலதா விளக்கம்

தூத்துக்குடி மாவட்ட தொழில் மையம் மற்றும் கொவில்பட்டி ஜே.சி.ஐ. அமைப்பு ஆகியவை இணைந்து குறு, சிறு மற்றும் நடுத்தர நிறவனங்கள் துறையை சேர்ந்த  தொழில் முனைவோருக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தன,.

இந்த நிகழ்ச்சி கோவில்பட்டி பாரதி நகரில் உள்ள ஜே.சி.பவன் கட்டிட அரங்கத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி ஜே.சி.ஐ.அமைப்பின் தலைவர் தீபன்ராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் சூர்யா வரவேற்று பேசினார்.

தூத்துக்குடி தொழில் மையத்தின் பொது மேலாளர் ஏ.சொர்ணலதா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவரை சுரேந்தர் அறிமுகப்படுத்தி பேசினார். கூட்டத்தில் கோவில்பட்டி சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவர் ஆர்.எஸ்.ரமேஷ், மற்றும் என்.ராஜவேல், ராஜ்குமார், சாய் மோட்டார்ஸ் தங்கராஜ், ஸ்டைலிஷ் தமிழா முருகன் உள்பட 80-க்கும் மேற்பட்ட தொழில் முனைவோர் கலந்து கொண்டனர்,’

 கூட்டத்தில் தூத்துக்குடி தொழில் மையத்தின் பொது மேலாளர் ஏ.சொர்ணலதா, குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனம் நடத்துவோருக்கு மத்திய மற்றும் மாநில அரசுகளின் ஆதரவு திட்டங்கள் என்ற தலைப்பில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

சிறிய அளவிலான தொழில்கள்  (SSI) என்று இருந்தது குரு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனம் (MSME) என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு உதவும் வகையில் மாவட்ட அளவில் ஒரு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அதுதான் மாவட்ட தொழில் மையம். ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு அலுவலகம் உண்டு. இந்த மாவட்டத்துக்கான அலுவலகம் தூத்துக்குடியில் இயங்கி வருகிறது.

குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தொடங்குவோருக்கு தேவையான ஆலோசனைகள் மற்றும் மானியத்துடன் வங்கி கடன்கள் ஏற்பாடு போன்றவற்றை நாங்கள் செய்து தருகிறோம், எங்கள் அலுவலகத்தில் நேரிலோ அல்லது ஆன்லைன் மூலமோ ப பதிவு செய்யமுடியும். பதிவு கட்டணம் என்று எதுவும் கிடையாது. ஆன்லைனில் பதிவு செய்யும்போது ஏதாவது கட்டணம் செலுத்த சொன்னால் அது போலி தளம் என்று புரிந்து கொண்டு உடனே வெளியே வந்து விடுங்கள்.

பொதுவாக டிரேடிங் அதாவது பிசினஸ் ஆக்டிவிட்டி, அடுத்து சர்வீசஸ் ஒரு டெய்லர் கடை வைத்து இருக்கிறீர்கள். இரண்டு மிஷின் போட்டு தைத்து கொடுத்தால் அது சர்வீஸ் ஆக்டிவிட்டி. அடுத்து மேனுபெக்சரிங் ஒரு பொருளை உற்பத்தி செய்தல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் கடன் வழங்கப்படுகிறது.

குறு தொழிலில் முதலீடு ரூ.1 கோடி என்றால் நிகர லாபம் 5 கோடியாகவும், சிறு தொழில் என்றால் முதலீடு ரூ.10 கோடி, நிகரலாபம் ரூ,50 கோடியாகவும், நடுத்தர தொழில் என்றால் முதலீடு ரூ.50 கோடி, நிகரலாபம் ரூ.250 கோடியாகவும் இருக்கவேண்டும். அப்படி இருக்கும்போது கடன் கிடைக்கும்.மாவட்ட சிறுதொழில் மையம் மூலம் 6 திட்டங்கள் மூலம் மானியத்துடன் கடன் பெற்று தருகிறோம்.

*பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (PMEGP) மூலம் ரூ.50 லட்சம் வரை கடன் பெறலாம், 18 வயது முதல் 55 வயது வரை உள்ளவர்கள் தகுதி பெற்றவர்கள்.நகரப்புறத்தில் உள்ளவர்களுக்கு 15 சதவீதம், புறநகர் பகுதியினருக்கு  25 சதவீதம் மானியமும் கிடைக்கும்.

*அடுத்து வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (UYEGP). அதாவது படித்து வேலையில்லாத இளைஞர்களுக்கு தொழில் தொடங்க 25 சதவீத மானியத்துடன் கடன் வழங்கப்படுகிறது இதற்கு வயது தகுதி 18 முதல் 45 வரை.

* புதிய தொழில் முனைவோர் தொழில் மேம்பாட்டு திட்டம்(NEEDS) மூலம் கடன் பெற கல்வி தகுதி பிளஸ்-2, ஐ.டி.ஐ., டிப்ளமோ. வயது 21 முதல் 55 வரை. ரூ.10 லட்சம் முதல் 5 கோடி வரை கடன் பெறலாம் இதில் ரூ.75 லட்சம் மானியமாக கிடைக்கும். எஸ்.சி.மற்றும் எஸ்/டி.வகுப்பினருக்கு  25 சதவீதம் மானியம் கிடைக்கும். மானிய தொகை 3 வருடத்துக்கு வங்கி கணக்கில்  இருப்பு வைக்கப்படும்,

* உணவு பதப்படுத்தும் தொழிலில் ஈடுபடும் குருந்தொழில் முனைவோருக்கான திட்டம். இதன் மூலம் கடலைமிட்டாய் கம்பெனி , ரைஸ்மில், பேக்கரி,சேமியா கம்பெனி தொடங்க கடன் பெறலாம். இதற்கு 35 சதவீதம் மானியம் கிடைக்கும்.

* கொரோனா காலத்தில் வெளிநாட்டு வேலை இழந்து தாயகம் திரும்பியோர் தொழில் தொடங்க கடன் வழங்கும் திட்டம், 2 ஆண்டுகள் வெளிநாட்டில் வேலை பார்த்ததற்கான சான்றிதழ் முக்கியம். வயது தகுதி 18 முதல் 55 வரை. இந்த திட்டம் சமீபத்தில் தான் தொடங்கி வைக்கப்பட்டு இருக்கிறது.

* அண்ணல் அம்பேத்கர் முன்னோடித் திட்டம்” (AABCS) முழுவதும் எஸ்.சி.மற்றும் எஸ்.டி,பிரிவினர்க்கானது. டிரேடிங் ஆக்டிவிட்டிக்காக ரூ.15 லட்சம் கடன் வழங்கப்படுகிறது. புது யூனிட் தொடங்குவது, விரிவாக்கம் செய்வது, பிரைவேட் லிமிடெட் தொடங்குவது போன்ற உற்பத்தி சேவைக்கு எத்தனை கோடி வேண்டுமானாலும் கடன் பெறலாம். இதற்கு மானியம் மட்டுமே ரூ.1. கோடியே 50 லட்சம் கிடைக்கும்.

விவசாயத்துக்கு தவிர மற்றவை அனைத்துக்கும் கடன் பெறலாம். இதற்கு 6 சதீதம் வட்டி மானியம் உண்டு. இதனை 10 வருடம் வரை பெறலாம். மேலும் வங்கிகள் மூலம் நேரடியாக பெற்ற கடனுக்கும் 25 சதவீதம் மானியம் உண்டு, மைக்ரோ மின் மானியம் 3 வருடத்துக்கு 20 சதவீதம், டிரேட் மார்க், குவாலிட்டி சர்ட்டிபிகேட் வாங்குவதற்கு செலவழித்த தொகையில் 25 சதவீதம் திரும்ப கிடைக்கும்.

இவ்வாறு தூத்துக்குடி தொழில் மையத்தின் பொது மேலாளர் ஏ.சொர்ணலதா பேசினார்.

பின்னர் தொழில் முனைவோர் கேட்ட பல்வேறு சந்தேகங்கங்களுக்கு சொர்ணலதா விரிவான விளக்கம் அளித்தார். இதில் திருப்தி அடைந்த அனைவரும் அவருக்கு நன்றி தெரிவித்துகொண்டனர்.

SKTS திருப்பதிராஜன்

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *