தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் இடமாற்றம் ரத்து
கடந்த சில தினங்களுக்கு முன்பு சில மாவட்ட ஆட்சியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, கூட்டுறவு துறை பதிவாளராக நியமனம் செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது.
மேலும் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக இருக்கும் ராகுல்நாத், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக செந்தில்ராஜிக்கு பதிலாக நியமிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது.
இந்த் உத்தரவு வந்தபிறகும் ஆட்சியர் செந்தில்ராஜ் வழக்கம் போல் அரசு விழாக்களில் கலந்து கொண்டு வந்தார். அவரது ஆய்வு மற்றும் களப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் பணி இட மாற்றத்தை ரத்து செய்து மீண்டும் தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்ற தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் பொறுப்பேற்றதில் இருந்து பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை, மக்கள் நலப் பணிகளை திறம்பட செய்து சிறப்பாக பணியாற்றி வந்தார். அவரது செயல்பாடுகள் மாவட்டம் முழுவதும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், ஆட்சியருக்கு நற்பெயரையும் ஏற்படுத்தியது.
இந்நிலையில் அவர் இடமாற்றம் செய்யப்பட்டது தூத்துக்குடி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. தூத்துக்குடி தொகுதியின் எம்.பி. கனிமொழியும் மாவட்ட ஆட்சியரின் செயல்பாடுகள் சிறப்பாக இருப்பதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் மாவட்ட ஆட்சியரிடம் பணியிட மாற்ற உத்தரவு ரத்து செய்யப்பட்டு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக செந்தில்ராஜ் தொடர்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரின் இடமாற்றம் உத்தரவும் ரத்து செய்யப்பட்டு அங்கேயே தொடர்ந்து பணியாற்றுவார் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.