22-ந்தேதி எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க.வினர் பேரணி; சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள் பற்றி கவர்னரிடம் மனு அளிக்கிறார்கள்
எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க.வினர் 22-ந்தேதி பேரணியாக கவர்னர் மாளிகைக்கு சென்று : சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள் பற்றி கவர்னரிடம் மனு அளிக்கிறார்கள்
இந்த ஊர்வலத்துக்கு அனுமதி கேட்டு அதிமுக அமைப்பு செயலாளர் டி,.ஜெயக்குமார் இன்று சென்னை பெருநகர காவல் ஆணையாளரிடம் நேரில் மனு அளித்தார். அந்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-
தி.மு.க. ஆட்சியில் நடைபெற்று வரும் பல்வேறு முறைகேடுகள் மற்றும் சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள் குறித்து அ.தி.மு.க. சார்பில் வருகிற 22.5.2023 திங்கட்கிழமை காலை 10.25 மணிக்கு கழக பொதுசெயலாளரும் முன்னாள் முதல் அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஊர்வலம் நடக்கிறது.
சென்னை கிண்டி சின்னமலையில் இருந்து கவர்னர் மாளிகை நோக்கி ஊர்வலம் செல்கிறது. ஊர்வலத்தில் கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள் கலந்து கொள்வார்கள்.
பேரணி முடிவில் முக்கிய கழக நிர்வாகிகள் ஆளுனரை நேரில் சந்தித்து மனு அளிக்க உள்ளோம்.
ஆகவே கழகத்தின் சார்பில் 22.5.2023 அன்று நடைபெற இருக்கும் பேரணிக்கு உரிய அனுமதியும், பாதுகாப்பும் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்,
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.







