கோவில்பட்டியில் நள்ளிரவுக்கு பிறகு மினி பஸ்கள் அனுமதி பெற்று இயங்குகிறதா? ஆட்டோ டிரைவர்கள் மனு
கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ரெயில் நிலைய ஆட்டோ டிரைவர்கள் சங்கத்தினர் சமூக ஆர்வலர் ராமகிருஷ்ணன் தலைமையில் நேற்று முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
ஆர்ப்பாட்டத்தில் ஆட்டோ டிரைவர்கள் மந்திரமூர்த்தி, செல்வகுமார், செல்வன், கணேசன், கமலக்கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டார்கள். ஆர்ப்பாட்டம் முடிந்ததும் கோட்டாட்சியர் மகாலட்சுமியை சந்தித்து மனு கொடுத்தார்கள். அந்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:- ரெயில் நிலையம் முன்பு நள்ளிரவில் இரண்டு மணி முதல் மினி பஸ்கள் இயக்கப்படுகின்றன,. இதனால் ரேயில் நிலையம் முன்பு ஆட்டோ இயக்கும் டிரைவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.
ஆட்டோவில் பயணிகளை ஏற்றும்போது, மினி பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் சேர்ந்து கொண்டு ஆட்டோ பயணிகளை அழைப்பதால், மோதல் ஏற்படும் சூழ்நிலைகளும், சட்டம் – ஒழுங்கு பாதிக்கப்படும் நிலையும் ஏற்படுகிறது.
மினி பஸ்கள் காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை இயக்கப்பட்டு வருகிறது. ரெயில் நிலையம் முன்பு நள்ளிரவில் இயக்கப்படும் மினிபஸ்கள் அனுமதி பெற்று இயக்கப்படுகிறதா? என்பதை ஆய்வு செய்து, அனுமதி இல்லாமல் இயக்கப்படும் மினிபஸ்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவைப் பெற்றுக் கொண்ட கோட்டாட்சியர் இதுபற்றி , விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் ஆட்டோ டிரைவர்கள் கலைந்து சென்றனர்.