• November 14, 2024

தமிழகத்தில் அரசியல், அதிகார மாற்றம் நிச்சயம் நடக்கும்; அண்ணாமலை பேச்சு

 தமிழகத்தில் அரசியல், அதிகார மாற்றம் நிச்சயம் நடக்கும்; அண்ணாமலை பேச்சு

தூத்துக்குடி தெற்கு மாவட்ட பா.ஜனதா கட்சி செயல்வீரர்கள் கூட்டம் தூத்துக்குடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் தலைமை தாங்கி வரவேற்று பேசினார். மாநில பொதுச்செயலாளர் பொன்.பாலகணபதி, மாநில துணைத்தலைவர் சசிகலாபுஷ்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக மாநில பா.ஜனதா தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

பிரதமர் நரேந்திர மோடியின் 9 ஆண்டு கால ஆட்சி முடிந்து தற்போது 10-வது ஆண்டில் அடியெடுத்து வைத்து உள்ளோம். 9 ஆண்டுகளாக ஏழைகள், மகளிர், விவசாயிகள், பட்டியலினத்தவர்களை மையமாக வைத்து பா.ஜனதா ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது. இதுதான் அரசியல்புரட்சி என்கிறோம். ஏனென்றால் சமுதாயத்தில் அடிப்படையில் இருந்து மாற்றி உள்ளோம்.

இதனால்தான் அனைத்து பகுதியிலும் பா.ஜனதா வெற்றி பெறுகிறது. தமிழகத்தில் பா.ஜனதா வெற்றி பெறும். எல்லா இடங்களிலும் களம் மாறிவிட்டன. நாம் கூண்டுக்குள் இருக்கும் கிளி போன்று பார்க்க கூடாது. திடீரென கூண்டை திறந்து விட்டால், அந்த கிளி யோசிக்கும். திடீரென பறந்து போ என்றால் எப்படி பறக்கும்?. அதனால்தான் தமிழகத்தில் ஆக்ரோஷமாக சில உரையாடல்கள் நடந்து கொண்டு இருக்கின்றன. அந்த கிளி பறக்க முடியும் என்று நம்புகிறேன். கூண்டு திறக்கப்பட வேண்டும் என்று நம்புகிறேன். அந்த கிளி எதற்கும் தயாராக இருக்கும் என்று நம்புகிறேன்.

எல்லா இடத்திலும் களம் மாறிவிட்டது என்பதை உணர்ந்து விட்டோம். தமிழகத்திலும் களம் மாறிவிட்டது. உங்களை பார்க்கும் போது எனக்கு மகிழ்ச்சி. கூண்டைவிட்டு வெளியில் வர நீங்கள் தயாராக வேண்டி இருக்கும். பறப்பதற்கு சக்தி இருப்பதாக நீங்கள் நம்புங்கள். நம்மால் முடியும் என்று நம்பிக்கை வந்து விட்டால், புரட்சி பின்பு தானாக வரும். தமிழகத்தில் அரசியல் புரட்சிக்கான நேரம் இது.

தி.மு.க.வினர் வில்லங்கமான நிலங்களை வாங்கி, போலீஸ் நிலையங்கள் மூலம் அந்த வில்லங்கத்தை சரி செய்து, விலையை உயர்த்தி விற்கிறார்கள். இது தி.மு.க.வின் விஞ்ஞான ஊழல். இதில் கிடைக்கும் பணத்தை தேர்தலில் கொடுக்கிறார்கள். இங்குள்ள அமைச்சர் என்னை ஏதோ செய்து விடுவோம் என்று பேசினாராம். நான் இங்குதான் உள்ளேன். எதுவும் செய்ய முடியாது. 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடியில் ஒரு பா.ஜனதா எம்.பி. தேர்வு செய்யப்பட வேண்டும். ஓட்டுக்கு பணம் கொடுக்கும் அவலம் ஆரம்பித்தது தூத்துக்குடியில்தான்.

நமக்கான நேரம் வந்து விட்டது. தமிழகத்துக்கு பா.ஜனதா கட்சிக்கு ஒரு புதிய பாதை அமைக்கப்படுகிறது. ஒரு நேர்மையான, நெஞ்சுரம் மிக்க பாதையில் பயணம் செய்ய நாம் தயாராக இருக்க வேண்டும். சாதனைகளை கூறி ஓட்டு கேட்போம். நம் அரசியல், தமிழகத்தில் உள்ள ஊழல் அரசியலுக்கு எங்கும் பொருந்தாத அரசியல். எங்கும் ஒட்ட முடியாது. இது பாலும், தண்ணீரும் கலப்பது போன்றது.

பாலும் தண்ணீரும் கலந்தால் பாலுக்கும், தண்ணீருக்கும் மரியாதை இருக்காது. ஆனால் பால் தனியாக இருந்தால் பாலுக்கு ஒரு மரியாதை, தண்ணீர் தனியாக இருந்தால் தண்ணீருக்கு ஒரு மரியாதை இருக்கும். ஆகையால் நம் பாதை தனிப்பாதையாக இருக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.

நம் பாதை தனிப்பாதை, சிங்கப்பாதை என்பதை மக்களுக்கு புரிய வைக்க வேண்டும். மோடியின் பாதை எப்போதும் சிங்கப்பாதைதான். இதுதான் நம் பாதை என்பது புரியும் போது தமிழகத்தில் அதிகார மாற்றம், அரசியல் மாற்றம் நிச்சயம் நடக்கும். நம் காலகட்டத்தில் இதனை நடத்தி காட்டப்போகிறோம். 2024, 2026-லும் நடக்கும்.

யார் உங்களை கூண்டுக்கிளி என்று சொன்னாலும் நம்பாதீர்கள். நீங்கள் கூண்டு கிளி அல்ல. 30 ஆண்டுகள் ஆனதால் பறக்க முடியாது என்பது அல்ல. பறப்பதற்கு தயாராக இருந்தோம். கூண்டில் இருந்து எப்போது பறக்கலாம் என்று யோசித்துக் கொண்டு இருந்தோம். இப்போது பறக்கப் போகிறோம். அதற்கான நேரம் வந்து விட்டது. நிச்சயமாக மாற்றம் நடக்கும். அதனை தூத்துக்குடியில் இருந்து தொடங்குங்கள்.

 இவ்வாறு அண்ணாமலை பேசினார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *