• November 14, 2024

சட்டபேரவை ஜனநாயக மரபுகளை சபாநாயகர் சீர்குலைத்து விட்டார் ; டி. ஜெயக்குமார் குற்றச்சாட்டு

 சட்டபேரவை ஜனநாயக மரபுகளை சபாநாயகர் சீர்குலைத்து விட்டார் ; டி. ஜெயக்குமார் குற்றச்சாட்டு

சென்னை ராயபுரம் தொகுதிக்குட்பட்ட பழைய வண்ணாரப்பேட்டையில் அ.தி.மு.க. தொகுதி அலுவலகத்தை முன்னாள் அமைச்சரும், அமைப்புச் செயலாளருமான டி ஜெயக்குமார் திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது :-
நடிகர் அஜித்குமாரின் தந்தை மறைவுக்கு அ.தி.மு.க. சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக சட்டப்பேரவையில் நேற்று ஆன்லைன் சூதாட்டம் மசோதா தாக்கல் செய்தபோது பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. ஆதரவு தெரிவித்ததை தொடர்ந்து, பன்னீர் செல்வத்தையும் பேச அழைத்தார் பேரவை தலைவர்.
தமிழக அரசு கொண்டுவரும் மசோதா மீது ஒரு கட்சியில் ஒருவருக்கு மட்டுமே பேச வாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற மரபு விதி இருக்கிறது.
ஆனால் கூடுதலாக பன்னீர் செல்வத்தை பேரவை தலைவர் பேச அழைத்தது ஜனநாயக மரபுகளை சீர்குலைக்கும் செயல். முன்னாள் முதலமைச்சர் என்ற அடிப்படையில், பேசுவதற்கு வாய்ப்பு அளித்தேன் என பேரவை தலைவர் அளித்த விளக்கம் ஏற்புடையது அல்ல.
ஒரே கட்சியில் மூன்று, நான்கு முன்னாள் முதலமைச்சர்கள் இருந்தால் அவர்கள் அனைவருக்கும் பேச வாய்ப்பு அளிக்க முடியுமா?அ.தி.மு.க. அல்லாத உறுப்பினராக தான் பன்னீர்செல்வம் பேசினார் என்றால், இறுதியில் அ.தி.மு.க. சார்பில் ஆன் லைன் சூதாட்ட மசோதாவை வரவேற்பதாக சொன்ன பன்னீர் செல்வத்தின் வார்த்தையை அவை குறிப்பில் இருந்து பேரவை தலைவர் நீக்காதது ஏன்?

கிருஷ்ணகிரி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளவர் அ.தி.மு.க. கிளை செயலாளர் என்று தவறான தகவலை சட்டப்பேரவையில் தமிழக முதலமைச்சர் கொடுத்துள்ளதற்கு, அவர் மீது ஏன் உரிமை மீறல் கொண்டு வரக்கூடாது
தமிழகத்தில் நாள்தோறும் கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும், நீதிமன்றத்துக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் தமிழகத்தில் நிலவும் போது, மக்களுக்கு எப்படி பாதுகாப்பு இருக்கும்.
தவறான செய்தியை வெளியிட்டதாக தினமலர் பத்திரிகை மீது உரிமை மீறல் கொண்டு வந்துள்ள சம்பவம், ஒட்டுமொத்த பத்திரிக்கை சுதந்திரத்திற்கும் திமுக அரசு கொடுத்துள்ள எச்சரிக்கை.
அ.தி.மு.க.பற்றிய கருத்துக்களை தெரிவித்து வரும் சசிகலாவுக்கு எவ்வித தார்மீக அடிப்படை உரிமையும் இல்லை. தி.மு. க.வில் உள்ள கூட்டணி கட்சிகள் அனைத்தும் வாய் திறக்காமல் மவுனமாக இருக்கின்றன. தேர்தல் நெருங்கும் போது அவர்கள் தி.மு.க. கூட்டணியை விட்டு விலகி விடுவார்கள்.
இவ்வாறு டி. ஜெயக்குமார் தெரிவித்தார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *