தாசில்தார் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை; ரூ.28¾ லட்சம் சிக்கியது
நெல்லை பாளையங்கோட்டை கே.டி.சி.நகர் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரன். இவர் நெல்லை சிப்காட் நிலஎடுப்பு தாசில்தாராக பணியாற்றி வருகிறார். இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக நெல்லை லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் வந்தது.
அந்த புகாரின் அடிப்படையில் தாசில்தார் சந்திரன் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த சில தினங்களுக்கு முன்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து அவரது வீடு மற்றும் உறவினரின் வீடுகளில் சோதனை நடத்த முடிவு செய்து கோர்ட்டில் அனுமதி பெற்றனர்.
நேற்று லஞ்ச ஒழிப்பு துறை கூடுதல் சூப்பிரண்டு எஸ்கால் நேரடி மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ராபின்ஞானசிங் தலைமையில் போலீசார் பாளையங்கோட்டை கே.டி.சி.நகர் டார்லிங்நகர் பகுதியில் உள்ள சந்திரனின் வீட்டில் அதிரடியாக சோதனை நடத்தினர். இதேபோல் அதே பகுதியில் உள்ள அவரது மகள் வீடு உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. காலை 7 மணிக்கு தொடங்கிய சோதனை இரவு வரை நீடித்தது.
இந்த சோதனையில் ரூ.28 லட்சத்து 91 ஆயிரத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர். வங்கியில் இருந்து பணம் எண்ணும் எந்திரம் கொண்டு வரப்பட்டு, பணம் முழுவதும் எண்ணப்பட்டது. மேலும் சோதனையின்போது ஏராளமான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டது.
இதேபோல் தூத்துக்குடி மடத்தூரில் உள்ள தாசில்தார் சந்திரனின் மகன் வீட்டில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அனிதா தலைமையிலான போலீசாரும், எட்டயபுரம் ரோட்டில் உள்ள அவரது நிறுவனத்தில் இன்ஸ்பெக்டர் சுதா தலைமையிலான போலீசாரும் சோதனை நடத்தினர். இந்த சோதனையிலும் ஏராளமான ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.