பாண்டவர்மங்கலம் கண்மாயில் மீன்பிடி திருவிழா
கோவில்பட்டி அருகே பாண்டவர்மங்கலம் கிராமத்தில் உள்ள கண்மாயில் கிராம மக்கள் சார்பில் மீன் குஞ்சுகள் வாங்கி விடப்பட்டன. தற்போது மீன்கள் நன்கு வளர்ந்து இருந்த நிலையில் நேற்று மீன்பிடி திருவிழா நடந்தது.
இதில் கிராம மக்கள் குடும்பத்தினருடன் கண்மாயில் இறங்கி மீன்வலை, மரக்கூடை, பிளாஸ்டிக் டிரம் ஆகியவற்றை கொண்டு மீன்களை பிடித்தனர். சிலரது வலையில் சிறிய வகையிலான விரால், கட்லா, கெழுத்தி, கெண்டை, அயிரை, உளுவை உள்ளிட்ட பலவகை மீன்கள் சிக்கின.
சிலரது வலையில் 5 கிலோ முதல் 7 கிலோ வரை எடை கொண்ட விரால், கட்லா, கெண்டை மீன்கள் சிக்கின. இந்த மீன்களை பிடித்தவர்கள் கைகளில் தூக்கி பிடித்து காண்பித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். போட்டி போட்டுக் கொண்டு அனைவரும் பல மணிநேரம் மீன்களை பிடித்தனர்
பெரும்பாலானவர்களுக்கு ஏராளமான மீன்கள் சிக்கின. சிலருக்கு குறைந்த எண்ணிக்கையில் மீன்கள் கிடைத்தன. அவர்களுக்கு அதிக மீன்களை பிடித்தவர்கள், தாங்கள் பிடித்த மீன்களை பகிர்ந்து கொண்டனர், கிராம மக்களின் ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக, அனைவரிடமும் நல்லுணர்வு இருக்க வேண்டும் என்பதற்காக இந்த மீன்பிடி திருவிழா நடத்தியதாக கிராம மக்கள் தெரிவித்தனர்
நேற்று பாண்டவர் மங்கலம் கிராமம் முழுவதும் வீடுகளில் மீன் குழம்பு சமையல் வாசனை கமகமத்தது