பிளஸ்-2 தேர்வு தொடங்கியது; தூத்துக்குடி மாவட்டத்தில் 19,997 பேர் எழுதினர்
தமிழகம் முழுவதும் பிளஸ் 2 தோ்வு இன்று (மாா்ச் 13) திங்கட்கிழமை தொடங்கியது. ஏப்ரல் 3 ஆம் தேதி வரை தேர்வு நடைபெறுகிறது. இத் தோ்வை தூத்துக்குடி மாவட்டத்தில் 91 மையங்களில் 9 ஆயிரத்து 137 மாணவா்கள், 10 ஆயிரத்து 860 மாணவிகள் என மொத்தம் 19ஆயிரத்து 997 போ் எழுதுகின்றனா். சிசிடிவி கேமரா மூலம் தேர்வு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
காலை 10 மணி முதல் பிற்பகல் 1.15 மணி வரை தேர்வு நடைபெற்றது. முதல் 10 நிமிடங்கள் வினாத்தாளை படித்து பார்ப்பதற்கும், அடுத்த 5 நிமிடங்கள் தேர்வர்களின் விவரங்களை சரிபார்ப்பதற்கும், பின்னர் தொடர்ந்து 3 மணி நேரம் தேர்வை எழுதுவதற்கும் அவகாசம் வழங்கப்பட்டது.
தோ்வு மையங்களில் குடிநீா், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. 170 பறக்கும் படை குழுவினர் , 23 வழித்தட அலுவலா்கள், 44 வினாத்தாள் கட்டுக் காப்பாளா்கள், 91 முதன்மைக் கண்காணிப்பாளா்கள், 91 அரசுத் துறை அலுவலா்கள், 1200 அறைக் கண்காணிப்பாளா்கள், 182 மாற்றுத் திறனாளி மாணவா்களுக்கான அலுவலா்கள் தோ்வு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பள்ளி மாணவர்களாக 8 லட்சத்து 51 ஆயிரத்து 303 மாணவ-மாணவிகளும், தனித் தேர்வர்களாக 23 ஆயிரத்து 747 பேரும் என மொத்தம் 8 லட்சத்து 75 ஆயிரத்து 50 பேர் எழுதினர்.
சென்னை மாநகரில் மட்டும் 405 பள்ளிகளில் இருந்து 45 ஆயிரத்து 982 மாணவ-மாணவிகள் தேர்வை எழுதுகிறார்கள்