டெல்லியில் நடக்கும் பேரணியில் தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் பங்கேற்க முடிவு
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில குழு கூட்டம் கோவில்பட்டியில் நடந்தது. மாநில தலைவர் பி. சண்முகம் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் சாமி நடராஜன், துணை தலைவர் டி. ரவீந்திரன், பொருளாளர் கே. பி. பெருமாள், மாவட்ட தலைவர் ஆர். ராகவன், மாவட்ட செயலாளர் புவி ராஜ், பொருளாளர் நம்பிராஜன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர்.
கூட்டத்தில், வருகிற ஏப்ரல் 5-ந்தேதி மத்திய அரசின் விவசாய தொழிலாளர் விரோத கொள்கைகளை முறியடிக்க, டெல்லியில் நடைபெற உள்ள விவசாய தொழிலாளர்கள் பேரணியில் தூத்துக்குடியில் மாவட்டத்திலிருந்து ஏராளமானவர்கள் கலந்து கொள்ள முடிவு செய்யப்பட்டது.
அனைத்து வேளாண் விளை பொருட்களுக்கும் எம்.எஸ். சாமிநாதன் கமிஷன் பரிந்துரைப்படி உற்பத்தி செலவு 1½மடங்கு உயர்த்தி வழங்க வேண்டும். மின்சார சட்டத் திருத்த மசோதாவை வாபஸ் பெற வேண்டும். பருவமழை பொய்த்ததால் கருகி வரும் மானாவாரி பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். ஸ்ரீவைகுண்டம் தடுப்பணை யிலிருந்து தொழிற்சாலைக்கு தண்ணீர் எடுத்துச் செல்வதை நிரந்தரமாக தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.