அ. தி. மு. க. பொதுச்செயலாளரை தேர்வு செய்வதில் தயக்கமா? டி. ஜெயக்குமார் பதில்
முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
நாடாளுமன்ற தேர்தல் வருகின்ற நிலையில் அண்ணன் எடப்பாடியார் தலைமையில் கழக வளர்ச்சிப் பணிகள் குறித்து இன்றைய தினம் நடந்த அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
. கழகம் ஆட்சியில் இல்லாவிட்டாலும் பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். ஆகியோர் “மக்களுடன் நாம் நெருக்கமாக இருக்க வேண்டும்” என்ற கொள்கையின் அடிப்படையிலும், புரட்சித்தலைவி அம்மா அவர்கள் “மக்களால் நான் மக்களுக்காக நான்” என்ற கொள்கையின் அடிப்படையில் மக்களுக்கு தேவையான உதவிகளை அதிமுகவினர் செய்துக்கொண்டிருக்கிறார்கள்.
விடியா தி.மு.க. அரசு பொறுப்பேற்றதிலிருந்து எந்தவொரு திட்டங்களையும் செயல்படுத்தாமல் மக்களுடைய விரோதத்தை சம்பாதித்திருக்கிறது. அம்மா அரசின் சாதனைகளையெல்லாம் பட்டித்தொட்டியெல்லாம் கொண்டு சென்று மக்களுக்கு தெரியப்படுத்தப்படுத்த வேண்டும். தி.மு.க. அரசின் அவல நிலையை வெளிப்படுத்தப்படுத்த வேண்டும் என்ற கருத்தின் அடிப்படையில்தான் இந்த கூட்டம் நடைபெற்றது.
நிருபர் கேள்வி:- எடப்பாடி பழனிச்சாமி உருவ பொம்மை எரித்தது குறித்து?
பதில்: -இது கண்டனத்திற்கு உரியது. பி.ஜே.பி. இது போன்ற செயல்கள் நடைபெறாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். இச்சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. பா.ஜ.க. மேற்படி நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகிறோம்.
கேள்வி:- பா.ஜ.க.வுடன் மோதல் உள்ளதாக கூறப்படுகிறதே?
பதில்: -அப்படி எதுவும் இல்லை. பா.ஜ.க. தகவல் தொழில்நுட்பப் பிரிவைச் சேர்ந்த பக்குவப்படாதவர்கள் சிலர் சில வார்த்தைகள் சொல்லியிருக்கிறார்கள். அதற்கு நாங்களும் கருத்து தெரிவித்தோம். இருந்தபோதிலும் அகில இந்திய அளவில் தேசிய ஜனநாயக கூட்டணி. தமிழ்நாட்டை பொறுத்தவரை அ.தி.மு-.க. தலைமையிலான கூட்டணி தொடரும்.
கேள்வி:- புரட்சித்தலைவி அம்மாவை விட பவுர்புல் மிக்கவர் தனது தயார், மற்றும் மனைவி என்று அண்ணாமலை கூறியுள்ளாரே?
பதில்:- இதற்கு நேற்றே நான் பதில் அளித்துவிட்டேன். மீண்டும் கூறுகிறேன் “புரட்சித்தலைவி அம்மாவைப் போன்று யாரும் கிடையாது. அம்மாவைப் போன்று வேறு யாரும் பிறக்க முடியாது”. அண்ணாமலை அவருடைய தாயார் மற்றும் மனைவியை உயர்த்தி பேசியிருக்கலாம். அது அவருடைய தனிப்பட்ட கருத்து. இருந்தபோதிலும் எங்கள் புரட்சித்தலைவிக்கு ஈடு இணையாக யாரும் கிடையாது. உலகத்தில் இனி பிறக்கவும் முடியாது. இதுதான் எனது கருத்து.
கேள்வி:- கூட்டணியினர் குறித்து சர்ச்சையான கருத்துகள் கூறியதாக சொல்லப்படுகிறதே?
பதில்: நாங்கள் சர்ச்சையான கருத்து எதுவும் கூறவில்லை.
கேள்வி:- நாடாளுமன்ற தேர்தலையொட்டி இந்த கூட்டத்தில் என்ன விவாதிக்கப்பட்டது?
பதில்:- தி.மு.க. ஆட்சியின் அவலங்களையும், அதிமுக ஆட்சியின் சாதனைகளையும் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று விவாதிக்கப்பட்டது. அதே போல் அதிமுக ஆட்சியில் இல்லாவிட்டாலும் தலைவருடைய பிறந்தநாளில் அனைத்து இடங்களிலும் மக்களுக்கு பயன்படக்கூடிய பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இன்றைக்கும் ராயபுரத்தில் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
கேள்வி: ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தேர்தலில் ஓ.பி.எஸ். சார்பில் போட்டியிட்டு பின்பு விலகிக்கொண்ட வேட்பாளரை கட்சியிலிருந்து நீக்கியது குறித்து?
பதில்: அவர் எங்கே கட்சி நடத்துகிறார். அது கட்சியே கிடையாது. அவர் நடத்துவது ஒரு கடை. காற்றிலே வாளை எடுத்து சுழற்றுவதுபோல சுழற்றிக்கொண்டு இருக்கிறார். கழகத்தினர் 99 சதவீதத்தினர் அண்ணன் எடப்பாடியார் தலைமையில் கீழ் செயல்பட்டுக்கொண்டு இருக்கிறோம். ஓ.பி.எஸ்., டிடிவி தினகரன், சசிகலா இவர்களை தவிர மற்ற அனைவரும் எங்களுடைய சகோதரர்கள். இவர்களுடன் இருப்பவர்கள் யாராவது வர நினைத்தால் அரவணைக்க தயாராக இருக்கிறோம்.
கேள்வி:- நீதிமன்றத்தின் தீர்ப்பு வந்த பின்பும் ஏன் பொதுச் செயலாளர் தேர்தலை நடத்த தயக்கம் காட்டுகிறீர்கள்?
பதில்:- இதில் தயக்கம் எதுவும் கிடையாது. இது சம்மந்தமாக கட்சி முடிவு செய்யும். அதற்கான தகவல் உரிய நேரத்தில் வரும்.
கேள்வி: அதிமுக லெட்டர் பேடில் ஓபிஎஸ் கடிதம் வருகிறதே?
பதில்: உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்த பிறகும் இது போன்று செயல்படுவது சட்டவிரோதமான செயலாகும். இது சம்மந்தமாக கட்சியின் சட்டக் குழு உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கும்.
கேள்வி: -ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை கவர்னர் திருப்பி அனுப்பியது குறித்து உங்களது நிலைப்பாடு என்ன?
பதில்: இது 100 சதவீதம் தடை செய்யப்பட வேண்டியது என்பது எங்களது நிலைப்பாடு. ஏனெனில் கிட்டத்தட்ட 35 பேர் இதனால் மரணமடைந்திருக்கிறார்கள். இது சம்மந்தமாக அதிமுக ஆட்சியின்போது ஒரு சட்டம் கொண்டுவந்தபோது ஐகோர்ட் மூலம் தடை செய்யப்பட்டது. இந்நிலையில் புதிய ஆட்சிவந்துவிட்டது. தற்போது இந்த மசோதா குறித்து ஆளுநர் சில விவரங்களை கேட்கிறார். ஆனால் விடியா தி.மு.க. அரசு
இந்த மசோதா மாநில அரசின் கட்டுப்பாட்டுக்குள் வருகிறது. அதேபோல் இந்த மசோதா இயற்றக்கூடிய அதிகாரம் மாநில அரசின் அதிகாரத்தில் வருகிறது. பொதுப்பட்டியலில் இல்லை என்பதனை அப்போதே சொல்லியிருக்க வேண்டியதுதான். ஏன் இந்த அவசர கோலம் இந்த விடியா தி.மு.க. அரசுக்கு. நான் சபாநாயகராக இருந்தேன் என்ற அடிப்படையில் சொல்கிறோன். இது சம்மந்தமாக ஒரு பில் ஆளுநருக்கு அனுப்ப வேண்டும். ஆனால் இந்த விடியா தி.மு.க. அரசு அதனை செய்யவில்லை.
கேள்வி: -தமிழகத்தில் பா.ஜ.க. இல்லாமல் எந்த அரசியல் முடிவும் எடுக்க முடியாது என்கிறாரே வானதிஸ்ரீனிவாசன்.
பதில்: -இது அவருடைய தனிப்பட்ட கருத்து. அவருடைய கட்சியை வளப்படுத்துவதற்காக சொல்லலாம். இருந்தபோதிலும் அகில உலகில் வல்லரசு என்று சொல்வது போல் தமிழகத்தில் வலிமை மிக்க இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பதில் அளித்தார்.