ஆவின் வாகனங்களை நிறுத்தி சோதனை: 1600 லிட்டர் கலப்பட பால் பறிமுதல்
தூத்துக்குடியில் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் மாரியப்பன், மாநகராட்சி சுகாதார அலுவலர்கள் ஸ்டாலின், ராஜசேகர், ஆவின் பொது மேலாளர் ராஜா குமார், மத்திய காவல்துறையினர் உதவி ஆய்வாளர் கணேசன், வடிவேல் ராஜா, சுபா, தொழிலாளர் நலத்துறை உதவியாளர் வள்ளுவன் உள்ளிட்ட அலுவலர்கள் இன்று காலை திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்ட ஆவின் பால் வாகனங்களை நிறுத்தி பாலை பரிசோதனை செய்தனர்.அப்[போது பாலில் தண்ணீர் மற்றும் ரசாயனத்தை கலந்து விற்பனைக்கு கொண்டு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.
புதிய பேருந்து நிலையம் அருகே நடத்தப்பட்ட சோதனையில் 600 லிட்டர், பழைய பேருந்து நிலையம் அருகே 800 லிட்டர் , டூவிபுரம் பகுதியில் சுமார் 200 லிட்டர் என மொத்தம் 1600 லிட்டர் பால் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுகுறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் மாரியப்பன் கூறுகையில்,:”பொதுமக்கள் உடலுக்கு தீங்கு ஏற்படுத்தக்கூடிய வகையில் பாலில் கலப்படம் செய்து விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகும். இது குறித்து தொடர்ந்து ஆய்வுகள் நடத்தப்படும். தூத்துக்குடி மட்டுமின்றி கோவில்பட்டி, திருச்செந்தூர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் விநியோகம் செய்யப்படும் பால் தொடர்ந்து சோதனை செய்யப்படும்” என்று தெரிவித்தார்/.
ஆட்சியர் நடவடிக்கை
தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் கி.செந்தில்ராஜ், பாலில் கலப்படம் குறித்து இன்று ஆய்வு மேற்கொண்டபின் கூறியதாவது:-
பாலில் கலப்படம் செய்வது, தண்ணீர் கலப்பது குற்றம். பாலில் கலப்படம் செய்வதற்காக பவுடர் உள்ளிட்டவற்றை கலப்பது சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கக்கூடியது.
அதைக் கட்டுப்படுத்துவதற்காகவும், கலப்படம் இல்லாத பால் பொதுமக்களுக்கு கிடைப்பதற்காகவும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் முன்னேற்பாடு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. உணவு பாதுகாப்புத்துறை, பால் வளத்துறை, தொழிலாளர் நலத்துறை மற்றும் காவல் துறை, மாநகராட்சி இணைந்து மாநகராட்சி பகுதியில் கலப்படம் இல்லாத பால் மக்களுக்கு கிடைப்பதற்காகவும், கலப்படம் செய்யப்பட்ட பாலை பறிமுதல் செய்வதற்காகவும் 3 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், அமெரிக்கன் மருத்துவமனை பகுதிகளில் பாலின் தரம் குறித்து கண்டறியும் கருவிகள் மூலம் சோதனை செய்து 1,500 லிட்டர் கலப்பட பால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதுபோல அளவீடு கருவிகளும் முறையாக இல்லை. 500 மில்லி லிட்டர் என்றால் 450 மில்லிலிட்டர் தான் இருக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் மக்களுக்கு தரமான பால் சரியான அளவில் சென்றடைவதற்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் இந்த நடவடிக்கை தொடரும்.
இவ்வாறு மாவட்ட ஆட்சியர்செந்தில்ராஜ், தெரிவித்தார்.