மான்கள் சேதப்படுத்தும் பயிர்களுக்கு உரிய நிவாரணம்; கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ.வுக்கு வன அலுவலர் கடிதம்
கோவில்பட்டி, கடம்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் வனவிலங்குகளால் விவசாய பயிர்கள் சேதமடைந்து விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர்.செ.ராஜூ தமிழக முதல்-அமைச்சரின் தனிப்பிரிவுக்கு கோரிக்கை மனு அனுப்பி இருந்தார்.’
இந்த மனுமீது எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக
தூத்துக்குடி மாவட்ட வன அலுவலர் அபிஷேக் தோமர், கடம்பூர் ராஜுவுக்கு அனுப்பி இருக்கும் கடிதத்தில் கூறி இருப்பதாவது:-
கோவில்பட்டி வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் விவசாய விளை நிலங்களில் மான்கள் சேதப்படுத்தமால் இருக்கும் வகையில் காப்புகாட்டினை சுற்றி வேலிகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது., மேலும் காப்புக்காட்டில் வனவிலங்குகளுக்கு தேவையான குடிநீரை பூர்த்தி செய்யும் வகையில் நீர் குட்டைகள், சிறு தடுப்பணைகள் உள்ளிட்ட நீர் ஆதாரங்கள் அரசு ஒதுக்கீடு செய்யும் நிதியின் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டு, அவற்றில் போதுமான அளவு நீர் நிரபப்பட்டு வருவதன் மூலம் மான்கள் காப்புகாட்டினை விட்டு வெளியேறமால் அவற்றின் வாழ்விடப்பகுதியில் பாதுகாப்பாக இருந்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும் கோவில்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட கிராமபகுதியில் சுற்றித்திரியும் மான் இனங்கள் புள்ளிமான் இனத்தைச் சேர்ந்தது. இம்மான் இனம் மிகவும் மென்மையான பயந்த சுபாவத்தை கொண்டுள்ளதால் மான்களை பிடித்திட முயற்சிக்கும் போதோ அல்லது வனப்பகுதிக்குள் விரட்டிட முயற்சிக்கும் போது ஏற்படும் அச்சத்தினால் மான்கள் உயிரிழக்க வாய்ப்புகள் உள்ளன.
எனவே மேற்படி மான்களை பிடித்திடவோ அல்லது காப்புக்காட்டுப் பகுதிக்குள் விரட்டிவிடவோ இயலாத சூழ்நிலை உள்ளது. ஆகையால் மான்களால் ஏற்படும் பயிர்சேதங்களுக்கு உரிய காலத்திற்குள் விண்ணப்பிக்கும் மனுதாரர்களின் மனுக்கள் மீது தகுந்த விசாரணை மேற்கொண்டு பயிர் இழப்பீடு வழங்கிட அரசு விதிகளின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.
Like
Comment
Share