ஓட்டல், பேக்கரிகளில் உணவு பாதுகாப்பு துறை புகார் எண்களை காட்சி படுத்த ஆட்சியர் உத்தரவு
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அறிவித்துள்ளார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தூத்துக்குடி மாவட்டத்தின் உணவு வணிக நிறுவனங்களில் கொள்முதல் செய்யப்படும் உணவுப் பொருட்களின் தரங்களில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால், பாதிக்கப்பட்ட நுகர்வோர் உணவு பாதுகாப்புத் துறையில் புகார் பதிவு செய்யும்பட்சத்தில், உரிய ஆதாரங்களைத் திரட்டி வழக்கு பதிவு செய்ய உணவு பாதுகாப்புத் துறைக்கு உதவியாக இருக்கும். சில வணிகர்கள் தங்களது வளாகத்தில், உணவு பாதுகாப்புத் துறையின் புகார் பிரிவின் எண்ணை நுகர்வோர்களுக்குத் தெரியும் வகையில் காட்சிப்படுத்தியுள்ளனர்.
ஆனால், பெரும்பாலான உணவு வணிகர்கள் அவ்வாறு அப்புகார் எண்ணை காட்சிப்படுத்தவில்லை. இதன் விளைவாக, நுகர்வோர் தாம் வாங்கிய உணவுப் பொருளில் தரக்குறைபாடு காணப்பட்டாலோ அல்லது உணவுப் பொருள் கெட்டுப்போயிருந்தாலோ, சம்பந்தப்பட்ட உணவு வணிகரிடம் சில சமயங்களில் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்படுகின்றது. அதுமட்டுமில்லாது, சில சமயங்களில் சம்பந்தப்பட்ட உணவு வணிகரிடம் சில நபர்கள் சட்டத்திற்குப் புறம்பாக ந~;டஈடு கோரியும் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். இதனால், அவ்வப்போது சட்டம் ஒழுங்கு பிரச்சினையும் ஏற்படுகின்றது.
எனவே, நுகர்வோருக்கு பாதுகாப்பான உணவு வழங்கப்படுவதைக் கண்காணிக்க ஏதுவாகவும், நுகர்வோருக்குரிய உணவு பாதுகாப்பு சம்பந்தமான பிரச்சினைக்கு சட்டப்படியான தீர்வு காண வேண்டும் என்பதற்காகவும், உணவு வணிக நிறுவனங்களில் பொது சுகாதாரத்தை மேம்படுத்தி, பாதுகாப்பான உணவு விற்கப்படுவதை உறுதி செய்யவும், பொது சுகாதார நலனிற்கு ஊறுவிளைவிக்கும் வகையில் ஏதேனும் உணவு பாதுகாப்பு அவசர நிலை ஏற்படும்பட்சத்தில், உரிய ஆதாரங்களை திரட்ட ஏதுவாகவும், உணவு வணிகர்கள் மற்றும் நுகர்வோருக்கிடையே சுமூக உறவு நிலவவும், உணவு வணிகர்கள் அனைவரும், தங்களது வளாகத்தின் பணம் செலுத்துமிடத்தின் (Cash Counter) அருகில் உணவு பாதுகாப்பு குறித்து புகார் அளிக்க ஏதுவாக, “9444042322” என்ற மாநில உணவு பாகாப்புத் துறை ஆணையர் அலுவலகத்தின் புகார் சேவை எண்ணை காட்சிப்படுத்திடல் வேண்டும்.
இந்த அலைபேசி எண்ணிற்கு புகார் அளிப்பவரது ரகசியம் காக்கப்படும். மேலும், புகார் பெற்றுக்கொண்டதிலிருந்து 14 தினங்களுக்குள், நடவடிக்கை விபரம் சம்பந்தப்பட்ட புகார்தாரருக்கு அலைபேசியின் வழி அனுப்பப்படும். மேலும், உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டிய குற்றமாக இருக்கும்பட்சத்தில், அலைபேசி வழி புகார் அளித்தவர், எழுத்துப்பூர்வமாகவும் புகார் அளிக்க வேண்டும் என்பதால், சம்பந்தப்பட்ட நுகர்வோர், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள உணவு பாதுகாப்புத் துறையின் நியமன அலுவலருக்கு எழுத்துப்பூர்வ புகார் அளிக்க வேண்டிய தேவை ஏற்படும் மற்றும் சாட்சியம் அளிக்கவும் நேரிடும்.
எனவே, உணவு பாதுகாப்பை மேம்படுத்திட எடுக்கப்பட்டுள்ள இந்நடவடிக்கைக்கு வணிகர்களும் நுகர்வோர்களும் ஓத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும், நுகர்வோர்கள் இந்த புகார் சேவை எண்ணை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்திடல் வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்படுகின்றது.
எவரேனும், இப்புகார் எண்ணை உள்நோக்கத்துடன் தவறாகப் பயன்படுத்தியதாக விசாரணையில் தெரிய வந்தால், சம்பந்தப்பட்ட நபர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு ஆட்சியர் செந்தில்ராஜ் கூறி இருக்கிறார் .