• May 20, 2024

தூத்துக்குடியில் பட்டப்பகலில் பயங்கரம்: வக்கீல் வெட்டிக்கொலை

 தூத்துக்குடியில் பட்டப்பகலில் பயங்கரம்: வக்கீல் வெட்டிக்கொலை

தூத்துக்குடி அய்யனடைப்பு சோரீஸ்புரம் 2வது தெருவைச் சேர்ந்தவர் பிச்சைக்கண்ணு என்பவரது மகன் முத்துக்குமார் (வயது 43). இவர் தூத்துக்குடி நீதிமன்றத்தில் வக்கீலாக  பணிபுரிந்து வருகிறார். மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நகை கடன் வழங்கும் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார்.

இன்று பிற்பகல் 2 மணியளவில் அவர் கடையில் இருந்தபோது 3  மோட்டார் சைக்கிள்களில் வந்த 7 பேர் அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களால் அவரை சரமாரியாக வெட்டினார்கள்.

இவர்கள் பிடியில் சிக்கி தப்பிக்க முடியாமல் பலத்த வேட்டுக்காயங்களுடன்  ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே முத்துகுமார் இறந்து போனார்.. 

பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடிவிட்டது. கொலை குறித்து தகவல் அறிந்து சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம், சப் இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று முத்துகுமார் உடலைக் கைப்பற்றி பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், தூத்துக்குடி ரூரல் டிஎஸ்பி (பொ) சத்யராஜ் ஆகியோர் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்ட வக்கீல்  முத்துக்குமாருக்கு மூன்று சகோதரர்கள் உள்ளனர். கடந்த 2019 ஆம் ஆண்டு இவரது சகோதரர் சிவக்குமார் என்பவர் தெற்கு காவல் நிலையம் அருகே மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அந்த வழக்கில் முத்துக்குமார் முதல் சாட்சியாக சேர்க்கப்பட்டிருந்தார்.

இந்த விவகாரத்தில் அவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு எதுவும் காரணம் உள்ளதா என்பது குறித்து சிப்காட் போலீசார் வழக்குப் பதிந்து கொலையாளிகளை தேடி வருகின்றனர். பட்ட பகலில் மாவட்ட ஆட்சியர் / மாவட்ட எஸ்பி அலுவலகம் அருகே வக்கீல்  வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்ந்து, அப்பகுதியில் பதற்றம் நிலை வருவதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *