5-வது நாளாக வேலை நிறுத்தம்: தூத்துக்குடி அனல்மின் நிலைய ஒப்பந்த ஊழியர்கள் ஒரு கிலோ மீட்டர் தூரம் நாற்காலிகளை சுமந்தபடி ஊர்வலம்
தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு-சிஐடியு சார்பில் என்.டி.பி.எல் அனல்மின் நிலையத்தில் தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனல்மின் நிலையம் முன்பு பிப்ரவரி (13)ந் தேதி முதல் என் டி பி எல் திட்ட செயலாளர் அப்பாதுரை தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போராட்டம் இன்று5 வது நாளாக நடைபெற்று வருகிறது.
என்டிபிஎல் அனல் மின் நிலையத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களை நிறுவனத்தின் நிரந்தர ஊழியராக அறிவித்து சம வேலைக்கு சம ஊதியம் வழங்கிட வேண்டும், அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் பண்டிகை விடுமுறை, தேசிய விடுமுறை வழங்கி போனஸ் வழங்கிட வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், என்டிபிஎல் நிர்வாகம் சார்பில் நேற்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வேலை நிறுத்த போராட்டித்திற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரணை செய்த மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி ஒப்பந்த ஊழியர்களின் வேலை நிறுத்தத்திற்கு தடை விதிக்க முடியாது. மேலும், தொழிற்சாலையில் இருந்து 1 கிலோ மீட்டர் தூரம் தாண்டி போராட்டம் நடத்தவும் நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளது.
இதைத்தொடர்ந்து இன்று 5வது நாளாக என்டிபிஎல் ஒப்பந்த ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், ஒப்பந்த ஊழியர்கள் தொழிற்சாலையில் இருந்து 1 கிலோ மீட்டர் தூரம் தலையில் நாற்காலிகளை சுமந்து கொண்டு நடந்து சென்றனர்.
போராட்டக்குழுவில் சிஐடியு மாநில செயலாளர் ரசல், மாவட்ட தலைவர் பேச்சிமுத்து, என் டி பி எல் திட்ட தலைவர் கணபதி சுரேஷ், சிஐடியு நிர்வாகிகள் முனியசாமி, பொன்ராஜ், காசி, வையணப்பெருமாள், நாகராஜன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சிபி எம் மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ் போராட்டத்தை வாழ்த்தி பேசினார். சிபிஎம் மாவட்ட செயலாளர் கே.பி.ஆறுமுகம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பா.புவிராஜ், புறநகர் செயலாளர் பா.ராஜா, மாவட்டக்குழு உறுப்பினர் எம்.எஸ்.முத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஊழியர்களின் தொடர் போராட்டம் காரணமாக சுமார் 420 மெகா வாட் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், கட்டுமான பணிக்காக வந்த வட மாநில தொழிலாளர்களை கொண்டு பாதுகாப்பின்றி ஆலையை தொடர்ந்து இயக்கி வருவதாக ஒப்பந்த ஊழியர்கள் குற்றச்சாட்டினர்.
மேலும், ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் மின் ஊழியர் மத்திய அமைப்பின் நிர்வாகிகளுடன் மதுரையில் மண்டல தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தில் மத்திய தொழிலாளர் துணை தலைமை ஆணையர் அருண் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் ஒப்பந்த ஊழியர்களின் கோரிக்கைகள் ஏற்க மறுத்ததால் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது .