• May 20, 2024

கொரோனா வீரியம் அதிகரித்தால் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்-அமைச்சர் மா.சுப்பிரமணியன்

 கொரோனா வீரியம் அதிகரித்தால்  கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்-அமைச்சர் மா.சுப்பிரமணியன்

காஞ்சீபுரம் மாவட்டம் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவ துறை சார்பில் ரூ.2.68 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள துணை சுகாதார கட்டிடங்கள், நர்சு குடியிருப்புகள்,  புறநோயாளி பிரிவு கட்டிடம் உள்ளிட்ட 9புதிய கட்டிடங்கள் திறப்பு விழா ஶ்ரீபெரும்புதூர் சிவன்தாங்கள் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்றது.

விழாவிற்கு மாவட்ட கலெக்டர் ஆர்த்தி தலைமை தாங்கினார். மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கட்டிடங்களை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

உருமாறிய கொரோனா வைரஸ்தான் தற்போது சீனா மட்டுமல்ல தைவான், ஹாங்காங், ஜப்பான், தென் கொரியா போன்ற நாடுகளில் பெருமளவில் பரவி வருகிறது. சீனாவைத் தவிர மற்ற நாடுகளில் உயிர் இழப்பு எதுவும் இல்லை என தெரிகிறது, இருப்பினும் பன்னாட்டு விமான நிலையங்களில் வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

கொரோனா வீரியம் குறைவாக இருப்பதால் தற்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை, கொரோனா வீரியம் அதிகரித்தால் மத்திய அரசு வழிகாட்டுதலின்படி கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

விழாவில் மருத்துவம் பொது சுகாதார துறை இயக்குனர் செல்வவிநாயகம், ஶ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ. செல்வபெருந்தகை, மற்றும் மருத்துவ துறை உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.


Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *