தூத்துக்குடி துப்பாக்கி சூடு: இறந்தவர்கள் குடும்பத்துக்கு கூடுதலாக ரூ. 5 லட்சம் நிதி; கனிமொழி எம்.பி.வழங்கினார்
![தூத்துக்குடி துப்பாக்கி சூடு: இறந்தவர்கள் குடும்பத்துக்கு கூடுதலாக ரூ. 5 லட்சம் நிதி; கனிமொழி எம்.பி.வழங்கினார்](https://tn96news.com/wp-content/uploads/2022/12/download-1-5.jpg)
துாத்துக்குடியில் கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் 22 ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது. இந்த வன்முறையின் போது மக்களை நோக்கி போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தனர்.
இது தொடர்பாக தமிழக அரசு ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் விசாரணை நடத்தியது. இதன் அறிக்கை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
துப்பாக்கி சூடு சம்பவத்தில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் ஏற்கெனவே தலா ரூ. 20 லட்சம் வழங்கப்பட்டிருந்த நிலையில், அருணா ஜெகதீசன் ஆணையம் பரிந்துரையின் பேரில் 13 குடும்பத்தினருக்கும் கூடுதலாக தலா ரூ. 5 லட்சம் வழங்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டமன்றத்தில் அறிவித்தார்.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் கூடுதல் நிதியுதவியை கனிமொழி எம்.பி. இன்று வழங்கினார்.
அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)