மாண்ட்ஸ் புயல்: முன் எச்சரிக்கை நடவடிக்கை சரியாக எடுக்காததால் மீனவர்கள் கடும் பாதிப்பு ; டி.ஜெயக்குமார் குற்றச்சாட்டு
சென்னை காசிமேடு துறைமுகத்தில் புயல் மழை பாதிப்புகளை முன்னாள் அமைச்சர் டி,ஜெயக்குமார் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார், பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-
மாண்டஸ் புயல் கடந்த 5 ம் தேதி காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. அதன் பிறகு புயலாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்த நிலையில் இந்த விடியா அரசு என்ன செய்திருக்கவேண்டும். முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருக்கவேண்டுமா? இல்லையா?
முதல்வர் தலைமையில் அதிகாரிகள் கூட்டத்தைக் கூட்டி என்ன என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்று பேசியிருக்கவேண்டும். நாகப்பட்டிணம் முதல் ஆந்திரா வரையில் புயல் கரையைக் கடக்கும் வாய்ப்பு இருக்கும் நிலையிலே கடற்கரை மாவட்டங்கள் மற்றும் அதனைச் சார்ந்த மாவட்டங்கள்,அதாவது மீனவர்களும்,விவசாயிகளும்,குடிசைவாழ் மக்களும் பாதிக்கும் நிலை உள்ளது.கடல் அரிப்பு முழுமையாக ஏற்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவிருந்தது.இந்த நிலைமையில் முதலமைச்சர் என்ன செய்திருக்கவேண்டும்.
உடனடியாக கூட்டத்தை போட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை,அதாவது பாதுகாப்பாக மக்களைத் தங்கவைப்பது,கடல் அரிப்பைத் தடுப்பது,போன்ற நடவடிக்கையைப் போர்க்கால அடிப்படையில் எடுத்திருக்கவேண்டும். ஆனால் 5 ம் தேதி வானிலை மையம் அறிவித்தபிறகு ஒரு கூட்டத்தைக்கூடப் போடாமல் அவர் தென்காசிக்கு குளு,குளு சுற்றுலா போகிறார். அங்குச் சென்று இன்று வருகிறார்.
9ம் தேதி புயல் கரையைக் கடக்கும் என்று தெரியுமல்லவா. கிட்டதட்ட 200க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் பாதிக்கும் என்று தெரியுமல்லவா.அது மட்டுமல்ல மீனவர்கள் தொழிலுக்குப் போகவில்லை. 10 நாட்களாகத் தொழிலுக்குப் போகவில்லை.யாராவது 1 ரூபாய் அளித்தார்களா. மீனவர்களுக்கு நிவாரணம் அளித்தார்களா.10 நாட்கள் பசியும்,பட்டினியுமாக இருந்துள்ளார்கள். எந்த படகுகளையும் எடுக்காமல் பசியும்,பட்டினியுமாக இருந்துள்ளார்கள். 1ரூபாய் இந்த அரசு அளிக்கவில்லை. இந்த பகுதியில் சுமார் 900 விசைப்படகுகள் இருக்கும் நிலையிலே,சுமார் 200 படகுகள் பாதிப்படைந்துள்ளன. மூழ்கிய படகுகளை ஒன்றுமே செய்ய முடியாது.ஒரு படகின் விலை 50 லட்சம்.அவர்கள் ( மீனவர்கள் ) 20 லட்சம் நிவாரணமாக கேட்டுள்ளார்கள்.அதேபோல வல்லங்கள்,கட்டு மரங்கள்,நாட்டுப் படகுகள்,இன்ஜின் பொருத்திய படகுகள் போன்ற அனைத்து படகுகளுக்கும் பகுதி பாதிப்பு,முழு பாதிப்பு என நிவாரணம் வழங்கவேண்டும்.
ஒரு வலையின் விலை 10 லட்சம். தற்போது அவை அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.அதனைப் பயன்படுத்த முடியாது. இதற்குக் குழு போட்டு,அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையிலே,அந்த குழு அறிக்கை அளித்து அந்த வகையிலே அவர்கள் கேட்கும் நிவாரணத்தை வழங்கவேண்டும். பெரிய படகுகளுக்கு 20 லட்சம்,சிறிய படகுகளுக்கு 10 லட்சம்,அதற்கும் சிறியதாக இருந்தால் 5 லட்சம் தரவேண்டும் என்பதுதான் மீனவர்களின் எதிர்பார்ப்பு. 10 நாட்கள் தொழிலுக்குப் போகாமலிருந்துள்ளார்கள்.மீனவர்களுக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் உள்ளது. அதன் மூலமாக அவர்களுக்கு ஒவ்வொரு கூட்டுறவுச் சங்க மகளிருக்கும்,ஆண்களுக்கும் 25 ஆயிரம் வழங்கவேண்டும்.வழங்க மாட்டார்கள்.குறைந்தபட்சம் 10 ஆயிரமாவது வழங்கவேண்டும்.
இன்னும் மேலும் 10 நாட்களுக்குத் தொழிலுக்குப் போக முடியாது. 20 நாட்களுக்குப் பசியைப் போக்கும் வகையில் கூட்டுறவுச் சங்கங்கள் மூலமாகக் குறைந்தது 10 ஆயிரம் அல்லது 25 ஆயிரம் தரவேண்டும் என்று அவர்களுக்கு எதிர்பார்ப்பு உள்ளது. இதனை விடியா அரசு செய்யவேண்டும்..செய்யுமா என்பதுதான் அவர்களுடைய எதிர்பார்ப்பு.
சூழ்நிலை இப்படி இருக்கும்போது அண்ட புளுகு,ஆகாச புளுகு என்று வாய்கூசாமல் பேசுகிறார்.எப்படிதான் வாய்க்கூசாமல் சொல்ல முடிகிறது என்று தெரியவில்லை. சிரிக்காமல் ஜோக் சொல்கிறார்.மக்கள் எந்த அளவுக்குப் பசியும்,பட்டினியுமாக அவர்களுடைய வயிறு எரிகிறது.ஆனால் கூசாமல் ஸ்டாலின் பொய் சொல்கிறார். மக்கள் மகிழ்ச்சியாக உள்ளார்கள் என்று பொய் சொல்கிறார். நாட்டு நடப்பே தெரியாத ஒரு முதலமைச்சர்தான் உள்ளார்.
இன்றைக்கு அமைச்சர்கள் ,அதிகாரிகள் பேச்சைக் கேட்டுப் பேசிவருகிறார்.அமைச்சர்களிடம் மக்கள் எப்படி உள்ளார் என்று கேட்கிறார்.அவர்களும் மக்கள் நன்றாக உள்ளார்கள் என்று சொல்கிறார்.உடனே நானும் இதனை ஊடகத்தில் சொல்லிவிடுகிறேன் என்று சொல்லிவிடுகிறார். கள நிலவரம் என்ன என்று யோசிக்கவேண்டாமா?. அடிப்படையில் எவ்வளவு பாதிப்பு உள்ளது.இதனை உணர்ந்து சொல்லவேண்டாமா. நாட்டு நடப்பை உணர்ந்தவர்கள் மட்டும்தான் நாட்டின் மன்னராக இருக்க முடியும்.முதலமைச்சராக இருக்க முடியும். இரண்டும் இல்லாத ஒரு பொம்மை முதலமைச்சர் இந்த நாட்டை ஆண்டுகொண்டிருக்கிறார்.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.
கேள்வி : மாற்றுத்திறனாளிகளுக்காக சென்னை மெரினாவில் 1 கோடியே 40 லட்சம் செலவில் நடைமேடை அமைத்து இருந்தார்கள். ஒரு வாரம்கூட தாங்காமல் உடைந்துள்ளதே
பதில் : மிகப் புத்திசாலியான அரசு இந்த அரசு. ஜெர்மன்,அமெரிக்கா,ஜப்பான் தொழிற்நுட்பத்தை முழுமையாகத் தமிழகத்திற்குக் கொண்டு சேர்க்கின்ற ஒரு அருமை பெருமை மிக்க அரசு என்றால் அது ஸ்டாலின் அரசு என்றுதான் சொல்லவேண்டும். கடலில் எப்போது வேண்டுமானாலும் சீற்றம் வரும். அப்படி என்றால் பைபர் கொண்டு அமைத்திருக்கவேண்டும்.இரும்பில் போட்டால்கூட துருப் பிடிக்கும். மரபலகையில் போடலாமா.மரமண்டை அரசுக்கு ஏதாவது புத்தி வேண்டாமா. இது அவர்களுக்குத் தெரியும்.இதனை 1.50 கோடி செலவு செய்தால் அது கடல் அரிப்பில் போய்விடும். திரும்பவும் 1.50 கோடியில் போடவேண்டும் அல்லவா. அப்போதுதான் அவர்களுக்கு வருவாய் வரும்.அரசுக்கு அல்ல.அவர்களுக்கு வருவாய் வரும்.
கேள்வி : அடுத்தது பெனசட் நகரில் அமைக்கபோகிறதாக தெரிவித்துள்ளார்களே
பதில் : கிழிந்தது போங்கள்.ஒரு இடத்திலே பல் இளித்துவிட்டது. மரப் பலகை போட்டு மாற்றுத்திறனாளிகளைக் கொச்சைப்படுத்தவேண்டாம். போடுவதை எப்.ஆர்.பி.யில் போடவேண்டும்.தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது. ஜப்பானில் நடைப்பயிற்சி கண்ணாடியில் போகலாம். அந்த அளவுக்குத் தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது. ஒரு புயலுக்கு மரப் பலகை காணாமல் போய்விட்டது. தொழிற்நுட்பத்தை பயன்படுத்தி எந்த அளவுக்குச் சூரிய வெளிச்சம் பட்டாலும் அதனைப் பாதிக்காத வகையில் தொழிற்நுட்பத்தை பயன்படுத்தவேண்டும்.
கேள்வி : மீனவ கிராமங்களைச் சென்று பார்த்துள்ளீர்கள்.எந்த மாதிரியான கோரிக்கையை அவர்கள் முன்வைத்துள்ளார்கள்
பதில் : பொதுவாகவே இந்த 18 மாதத்தில் அவர்களின் வாழ்வாதாரம் போய்விட்டது. அவர்கள் டீசல் மற்றும் மண்ணெண்ணெய்யை பயன்படுத்துகிறார்கள். இதன் மானியத்தை அறிவிக்கவேண்டும். நாங்கள் விசைப்படகுகளுக்கு 1500 லிட்டரிலிருந்து 1800 லிட்டராக உயர்த்தி அளித்தோம்.இப்போது டீசல் விலையும்,மண்ணெய் விலையும் அதிகரித்துவிட்டது. அவர்களால் படகு எடுக்க முடியவில்லை.எனவே மானியத்தை அறிவிக்கவேண்டும். அதிகப்படுத்தித் தரவேண்டும் என்பதுதான் அவர்களின் கோரிக்கை.அப்போதுதான் அவர்கள் தொழிலுக்குப் போக முடியும். இந்த புயலின்போது முன்னெச்சரிக்கை இவர்கள் எடுத்திருந்தால் என்றால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.