• February 7, 2025

கோவில்பட்டி வில்லிச்சேரி ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த நடவடிக்கை; கனிமொழி எம்.பி.யிடம் துரை வைகோ வலியுறுத்தல்

 கோவில்பட்டி வில்லிச்சேரி ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த நடவடிக்கை; கனிமொழி எம்.பி.யிடம் துரை வைகோ வலியுறுத்தல்

ம.தி.மு.க. தலைமை கழக செயலாளர் துரை வைகோ, கனிமொழி எம்.பி.யை சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கோவில்பட்டி வில்லிச்சேரி கிராமத்தில் கடந்த வாரம் ஆய்வு மேற்கொண்டேன். அப்போது மருத்துவர்களும், நமது இயக்க தோழர்களும் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர். குறிப்பாக வில்லிச்சேரியில் ஆரம்ப சுகாதார நிலையம் 30 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது.
இந்தப் பகுதியை சுற்றி உள்ள சத்திரப்பட்டி, இடைச்சேவல், நாலாட்டின்புத்தூர், மெய்த்தலைவன் பட்டி, கார்த்திகைப்பட்டி, ஊத்துப்பட்டி, சீனிவாசா நகர், இந்திரா நகர், லட்சுமி மில் மேல் மற்றும் கீழ் குடியிருப்பு பகுதிகள், ஆவல்நத்தம் உள்ளிட்ட ஏராளமான கிராமங்களின் எளிய விவசாய குடும்பத்தைச் சேர்ந்த சுமார் 20 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்றும், பேறு காலத்தின் போது தாய்மார்களும் இந்த மருத்துவமனையை பெரிதும் நம்பி இருக்கிறார்கள்.
மருத்துவமனை 6 படுக்கைகள் கொண்ட ஆரம்ப சுகாதார நிலையமாக இருப்பதாலும், பயனாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாலும் வில்லிச்சேரி ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தி படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரித்தும், மருத்துவ அலுவலர்கள் தங்கி பணி புரிவதற்கு குடியிருப்புகளை கட்டிக் கொடுத்தும் அவர்களுக்கு தேவையான குடிநீர் மற்றும் கழிப்பிட வசதியை ஏற்படுத்தித் தருமாறும் கோரிக்கைகளை விடுத்தனர்.
இது குறித்து நமது இயக்க தலைவர் வைகோ, தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு 2021 செப்டம்பர் 15 அன்று எழுதிய கடிதத்தின் நகலையும் என்னிடம் தந்தனர்.
இது சம்பந்தமாக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியை அவரது இல்லத்தில் சந்தித்து அவரது கவனத்திற்கு எடுத்துச் சென்று அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையமாக மாற்றித்தர வில்லிச்சேரி கிராம மக்கள் சார்பாக கேட்டுக் கொண்டேன்.
மேலும் வில்லிச்சேரி பகுதியில் கடந்த 28.11.2022 அன்று இரவு திடீரென வீசிய சூறாவளி காற்றினால் சுமார் 300 ஏக்கரில் பயிரிடப்பட்டு இருந்த மக்காச்சோளம் தரையோடு தரையாக சாய்ந்து விட்டது. பல விவசாயிகள் வருவாய் இழந்து தவிக்கின்றனர். இவர்களுக்கு பயிர் காப்பீடு மூலம் நிவாரணம் கிடைத்திடவும், இயற்கைப் பேரிடர் நிதியிலிருந்து சிறப்பு நிவாரணம் கிடைத்திட நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டேன்.
இவ்வாறு அறிக்கையில் துரை வைகோ கூறி இருக்கிறார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *