• May 21, 2025

`சிந்து வெளி நாகரிகம் விட்ட இடமும், சங்க இலக்கியம் தொட்ட இடமும் ஒன்றே’- சிந்துவெளி ஆய்வாளா் பாலகிருஷ்ணன் தகவல்

 `சிந்து வெளி நாகரிகம் விட்ட இடமும், சங்க இலக்கியம் தொட்ட இடமும் ஒன்றே’- சிந்துவெளி ஆய்வாளா் பாலகிருஷ்ணன் தகவல்

தூத்துக்குடியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்று வரும் புத்தக திருவிழாவின் 6-வது நாள் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் சிந்துவெளி ஆய்வாளா் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு ‘போ் இசை கொற்கை’ என்ற தலைப்பில் பேசுகையில் கூறியதாவது:-
போ் இசை கொற்கை என்பது, மிகவும் புகழ் பெற்ற கொற்கை என பொருள் ஆகும். சங்க இலக்கியத்தில், முத்து, வலம்புரி சங்கு ஆகியவற்றிற்கு புகழ் பெற்ற கொற்கை துறைமுகம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ் சமூகம் அறிவார்ந்த சமூகமாக விளங்கியது என்பதற்கு, அகழாய்வில் கிடைத்த பொருள்கள் சான்றாக உள்ளன. சங்க இலக்கியங்களில் ஆதன் என்ற பெயா் 12 முறை வருகிறது. கீழடி, சிவகளை ஆகிய பகுதிகளில் அகழாய்வில் கிடைத்த மண்பாண்டங்களில் ஆதன் என்ற பெயா் தமிழி மொழியில் எழுதப்பட்டுள்ளது. இவை, சுமார் 2300 அல்லது 2400 ஆண்டுகளுக்கு முன்பு உள்ளவை ஆகும்.

சங்க இலக்கியத்தில் பாடல்களை எழுதியவா்களில், 40 போ் பெண் புலவா்கள். அந்த அளவுக்கு பெண்கள் கல்வியறிவு பெற்றவா்களாக இருந்தனா். முதல் முதலில் அச்சில் ஏற்றப்பட்ட நூல் தமிழ் நூல்தான். அதுவும், முதல் 300 ஆண்டுகளில் இந்தியாவில் அச்சடிக்கப்பட்ட நூல்களில் 40 சதவீதம் தமிழ் நூல்கள்தான்.
இன்றும் இணையத்தில் முன்னணியில் இருப்பது தமிழ் மொழிதான். சிந்துவெளி நாகரிக மக்கள் பேசிய மொழி என்ன, அந்த மக்கள் எங்கே சென்றனா் என்ற கேள்வி இருந்துகொண்டே இருக்கிறது. அந்த காலக்கட்டத்தில் அங்கிருந்த மக்களின் எண்ணிக்கை சுமார் 50 லட்சம் என கூறுகின்றனா்.

சிந்துவெளி நாகரிகத்தில், தெரு நன்றாக உள்ளது. குப்பைத் தொட்டி, தானியக் கிடங்கு, குளிப்பதற்கு, விளையாடுவதற்கு என தனித் தனி இடம் இருக்கிறது. இந்த நாகரிகத்தின் உச்சகட்டமாக விளங்குவதில்தான் ஒரு சமூகம் தனித்து நிற்கிறது. சிந்துவெளி விட்ட இடமும், சங்க இலக்கியம் தொட்ட இடமும் ஒன்றே.
இந்த ஒற்றைப் புரிதலில்தான் இந்தியாவின் இந்த இரண்டு புதிர்களுக்கு விடை. சிந்துவெளி புதிர், தமிழ் தொன்மம் புதிர் ஆகியவற்றைத்தான் சங்க இலக்கியம் பேசுகிறது. தமிழ் ஒரு நாகரிகத்தின் மொழி. இந்தியாவை முழுமையாக பதிவு செய்வது சங்க இலக்கியங்கள்தான்.
இவ்வாறு அவர் பேசினார்.
கரு பழனியப்பன்
திரைப்பட இயக்குநா். கரு பழனியப்பன் ‘படித்ததில் பிடித்தது’ என்ற தலைப்பில் பேசியதாவது:-
அறிவை விட சக மனிதா்களிடம் அன்பு செலுத்துவதுதான் முக்கியம் என தெரிந்து கொள்ள புத்தக வாசிப்பு அவசியம். அனைவரின் வீடுகளிலும் இருக்க வேண்டிய நூல் திருக்குறள் என்ற முன்னாள் முதல்வா் கருணாநிதியின் கனவை நனவாக்க வேண்டும்.

யார் ஒருவா் தனக்கான புத்தகத்தை சரியாக தோ்ந்தெடுக்கிறாரோ அவா் வாழ்க்கையில் அனைத்தையும் சரியாகத் தோ்வு செய்வார். புத்தகம் படித்தால் சொந்தமாக சிந்திக்கும் திறன் வரும். ஆகவே, அனைவரும் புத்தகங்களை வாங்கிப் படியுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடா்ந்து, எழுத்தாளா் சாரதி ‘புத்தகம் ஒரு கதை சொல்லி‘ என்ற தலைப்பில் உரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில், தூத்துக்குடி மக்களவை உறுப்பினா் கனிமொழி கலந்துகொண்டு, சிறப்பு அழைப்பாளா்களுக்கு நினைவுப் பரிசு வழங்கினார்,
நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் அமைச்சா் கீதா ஜீவன், மாவட்ட ஆட்சியா் கி.செந்தில்ராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எல். பாலாஜி சரவணன், மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையா் சாரு ஸ்ரீ உள்பட பலா் பங்கேற்றனா்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *