தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினர் 74 பேருக்கு பாராட்டு சான்றிதழ்
தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 8 இன்ஸ்பெக்டர்கள் உட்பட 74 காவல்துறையினருக்கு காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். அதன் விவரம் வருமாறு:-
*வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை வழக்கில் இறந்த நபரையும் சம்மந்தப்பட்ட எதிரியையும் துரித நடவடிக்கை மேற்கொண்டு 3 மணி நேரத்திற்குள் கண்டுபிடித்து வழக்குப்பதிவு செய்து எதிரியை கைது செய்த வடபாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சிவராஜா,நீதிமன்ற சம்மன் சார்பு பணியில் ஒரே மாதத்தில் 78 சம்மன்களை சார்பு செய்த முதல் நிலை காவலர் வேல்முருகன்,
*தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 2009-ம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் சம்மந்தப்பட்டு பிடியாணை பிறப்பிக்கப்ட்ட 2 எதிரிகளை திறம்பட கண்டுபிடித்து கைது செய்து அவர்களிடமிருந்த துப்பாக்கி மற்றும் அரிவாளை பறிமுதல் செய்த தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜாராம், உதவி ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் தலைமை காவலர் ஞானமுத்து.
*சிப்காட் காவல் நிலைய திருட்டு வழக்கில் சம்மந்தப்பட எதிரிகள் 2 பேரை கைது செய்யவும், எதிரிகளிடமிருந்து ஒரு பவுன் நகையை கைப்பற்றவும் உதவியாக இருந்த சிப்காட் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பிராங்க் ஸ்டீபன், முறப்பநாடு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சுந்தர்ராஜ், சிப்காட் காவல் நிலைய தனிப்பிரிவு முதல் நிலை காவலர் கலைவாணர் மற்றும் காவலர் பாலசுப்பிரமணியன்.
- மத்தியபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் 9 பவுன் தங்க செயினை பறித்து சென்ற எதிரியை துரிதமாக செயல்பட்டு கைது செய்து சம்பவத்திற்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த தூத்துக்குடி நகர உட்கோட்ட தனிப்படையை சேர்ந்த தலைமை காவலர் . மாணிக்கராஜ், முதல் நிலை காவலர்கள் சாமுவேல், மகாலிங்கம், காவலர்கள் செந்தில்குமார், திருமணிராஜன் . முத்துப்பாண்டி ஆகியோர் உட்பட 8 காவல் ஆய்வாளர்கள் மற்றும் 74 காவல்துறையினர்.
இவர்களின் சிறந்த சேவையை பாராட்டி தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் வெகுமதி மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில் தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், தூத்துக்குடி சைபர் குற்ற பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் லயோலா இக்னேஷியஸ், தூத்துக்குடி ஊரக உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் சந்தீஷ், விளாத்திகுளம் உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட காவல்துறையினர் கலந்து கொண்டனர்.