காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கத்துக்கு தடை- `இது சரித்திர முடிவு’ என்று ரூபி மனோகரன் எம்.எல்.ஏ.பேட்டி
கடந்த நவ. 15 ஆம் தேதி சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற மோதலைத் தொடர்ந்து நாங்குநேரி காங்கிரஸ் எம்எல்ஏ ரூபி மனோகரன் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாகத் காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கைக் குழு தலைவர் கே.ஆர். ராமசாமி நேற்று அறிவித்தார்.
இந்நிலையில் இந்த ஒழுங்கு நடவடிக்கை முறையற்றதாக இல்லை என்பதாலும் இயற்கை நீதியின் கொள்கைக்கு முரணாக இருப்பதாலும் ரூபி மனோகரனின் நீக்கத்திற்கு தடை விதிக்கப்படுவதாக தமிழக மாநில பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மேலும், தமிழக காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் செயல்பாடு நிறுத்தி வைக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
இதை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ ரூபி மனோகரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
காங்கிரஸ் கட்சி பலமாக திசையை நோக்கி செல்கிறது. மாநில அளவில் நடக்கும் நிகழ்வு அகில இந்திய தலைமைக்கு செல்லவில்லை என்ற பொய்யான தகவல் துடைத்தெறியப்பட்டு உள்ளது. இடைக்கால நீக்கத்தில் உடனடியாக தலையிட்டு முடிவுக்கு கொண்டுவந்த சோனியா காந்திக்கு எனது நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
காலையில் செய்யப்பட்ட சஸ்பெண்ட் மாலையில் ரத்தானது சரித்திர முடிவாகும். காங்கிரஸ் கட்சியை எனது தெய்வமாகவும் குடும்பமாகவும் பார்க்கிறேன். எனது உடலில் காங்கிரஸ் ரத்தம் ஓடுகிறது. இறுதி மூச்சு உள்ளவரை காங்கிரசில் மட்டுமே அரசியல் பணியாற்றுவேன். ராகுல் காந்தியின் நடைபயணம் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. கட்சியில் உள்ள அனைவரையும் ஒருங்கிணைக்கும் பண்புடைய தலைவர் தலைமை பொறுப்பில் உள்ளார். காலையில் செய்யப்பட்ட சஸ்பெண்ட் மாலையில் ரத்தானது சரித்திர முடிவு இதனை காங்கிரஸ் செய்திருக்கிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.