• May 20, 2024

மனநல காப்பகத்தில் இணைந்த ஜோடிக்கு பணி நியமன ஆணை; அமைச்சர் வழங்கினர்

 மனநல காப்பகத்தில் இணைந்த ஜோடிக்கு பணி நியமன ஆணை; அமைச்சர் வழங்கினர்

சென்னை கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் சிகிச்சைக்காக வந்த இடத்தில் சென்னையை சேர்ந்த மகேந்திரனுக்கும் (வயது 42), வேலூரை சேர்ந்த தீபாவுக்கும் (36) இடையே காதல் மலர்ந்தது. இதை தொடர்ந்து இவர்களுக்கான திருமணம், கீழ்ப்பாக்கம் மனநல காப்பக வளாகத்தில் நேற்று நடந்தது. காப்பகத்துக்கு வெளியில் உள்ள கோவிலில் மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் முன்னிலையில் இந்து முறைப்படி திருமணம் நடந்து முடிந்தது.
இதை தொடர்ந்து காப்பக வளாகத்தில் ஏற்பாடு செய்திருந்த வரவேற்பு நிகழ்ச்சிக்கு மேளதாளம் முழங்க அழைத்து வரப்பட்டனர். வரவேற்பு நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, தயாநிதிமாறன் எம்.பி., வெற்றி அழகன் எம்.எல்.ஏ., மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர் நாராயணபாபு, கீழ்ப்பாக்கம் மனநல காப்பக இயக்குனர் பூர்ண சந்திரிகா ஆகியோர் கலந்துகொண்டனர்.
மணமக்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சியில் கல்யாண பரிசாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் பணி நியமன ஆணை வழங்கி, அவர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதக்கவிட்டார். மகேந்திரன், தீபா தம்பதியினருக்கு வாழ்க்கை பயணத்தை தொடங்கி வைத்த மனநல காப்பகத்திலேயே ரூ.15 ஆயிரம் மாத சம்பளத்தில் ‘வார்டு மேலாளர்’ பணிகளை இருவருக்கும் வழங்கி, அமைச்சர் மா.சுப்பிரமணியன், அவர்களின் வாழ்வுக்கு வழி வகுத்துள்ளார்.
மனநல காப்பகத்தின் இயக்குனர், டாக்டர்கள், நர்சுகள் கியாஸ் அடுப்பு, பாத்திரங்கள் போன்ற சீர்வரிசையை மணமக்களுக்கு வழங்கினர். மேலும் அங்கு பணிபுரியும் நர்சுகள் வரவேற்பு மேடையில் “நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும், பொண்ணுதான்” என்ற சினிமா பாடலை பாடி வாழ்த்தினார்கள். மனநல ஆலோசனை வழங்குவது எப்படி? என்பது குறித்து பயிற்சி பெறும் மாணவர்களும் தங்களுடைய பங்குக்கு நடனம் ஆடி அசத்தினார்கள்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *