• February 7, 2025

தூத்துக்குடி துறைமுகத்தில் சரக்கு கப்பல்களை பார்த்து பொதுமக்கள் வியப்பு

 தூத்துக்குடி துறைமுகத்தில் சரக்கு கப்பல்களை பார்த்து பொதுமக்கள் வியப்பு

சுதந்திர போராட்ட தியாகி செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனாரின் 151-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி தூத்துக்குடி வ.உ.சி.துறைமுகத்தை பொதுமக்கள் பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டது. இன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பொதுமக்கள் பார்வையிடலாம் என்று துறைமுகம் நிர்வாகம் அறிவித்தது.
இதை தொடர்ந்து இன்று காலை தூத்துக்குடி துறைமுகத்தை பார்வையிட பொதுமக்கள் குடும்பத்துடன் குவிந்தனர். தூத்துக்குடியை சேர்ந்தவர்கள் அதிகம் பேர் வந்து இருந்தனர். மேலும் பள்ளிக்கூட மாணவ, மாணவிகள் அழைத்து வரப்பட்டிருந்தனர்.
துறைமுகத்தின் நுழைவு பகுதியில் பொதுமக்கள் ஒவ்வொருவரிடமும் ஆதார் அட்டை மூலம் முகவரி மற்றும் பெயர் பரிசோதனை செய்யப்பட்டு குறிப்பெடுக்கப்பட்டது. மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மற்றும் மத்திய ரிசர்வ் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்,

துறைமுகத்தில் அனுமதி பெற்று உள்ளே சென்றவர்கள் அங்கிருந்த சரக்கு கப்பல்களை பார்வையிட்டனர். துறைமுகத்தில் இன்று 3 சரக்கு கப்பல்கள் வந்து இருந்தன. பயனிகள் கப்பல் எதுவும் வரவில்லை.
ஒரு சரக்கு கப்பலில் காற்றாலை அமைக்க தேவையான இறக்கைகள் வந்து இருந்தன. இன்னொரு கப்பலில் நிலக்கரி வந்திருந்தது. மற்றொரு கப்பலில் முந்திரிக்கொட்டைகள் வரவழைக்கப்பட்டு இருந்தன.
சரக்கு கப்பலில் இருந்து நிலக்கரி இறக்கப்பட்டு லாரிகள் மூலம் அனல் மின்நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இன்னொரு கப்பலில் இருந்து முந்திரிக்கொட்டை மூட்டைகள் இறக்கப்பட்டன. இதற்கு ராட்சத கிரேன்கள் பயன்படுத்தப்பட்டன.
இந்த காட்சிகளை பார்வையிட்ட பொதுமக்கள் மற்றும் பள்ளிக்கூட மாணவர், மாணவிகள் ஆச்சரியத்தில் திகைத்து போனார்கள். காலை நேரத்தில்
சங்கரன் கோவில் பகுதியில் இருந்து 2 பள்ளி மாணவர், மாணவிகள் 2 பஸ்களில் வந்து இருந்தனர். அவர்களை வரிசையாக ஆசிரியர்கள் மிகுந்த பாதுகாப்புடன் துறைமுகத்துக்குள் அழைத்து வந்தனர்.
தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் வெவ்வேறு ஊர்களில் இருந்து பள்ளி மாணவர்கள், துறைமுகம் நோக்கி வந்த வண்ணம் இருந்தனர். துறைமுக செயல்பாடுகளை கண்டு அவர்கள் வியந்து போனார்கள். கடலில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டு இருந்த படகுகள் மற்றும் கப்பல்களை ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
கடலோர பாதுகாப்பு படைக்கு சொந்தமான 2 கப்பல்கள் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டு இருந்தன. அவற்றின் பிரமாண்டத்தை பார்த்து பொதுமக்கள் வியந்தனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *