• February 7, 2025

அரசு பள்ளிகளில் படித்து உயர் கல்விக்கு சென்ற மாணவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம்; மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார்

 அரசு பள்ளிகளில் படித்து உயர் கல்விக்கு சென்ற மாணவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம்; மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார்

2022-2023-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் கடந்த மார்ச் மாதம் 18-ந்தேதி சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது வெளியிடப்பட்ட அறிவிப்புகளில், ‘அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயின்ற மாணவிகளுக்கு, அவர்கள் இளங்கலை படிப்பு படித்து முடிக்கும் வரை மாதம் ரூ.1,000 அவர்களது வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்’ என்ற அறிவிப்பும் ஒன்று.
இந்த திட்டத்திற்காக பட்ஜெட்டில் ரூ.698 கோடி ஒதுக்கப்பட்டது. முதற்கட்டமாக 1 லட்சம் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்பட இருக்கிறது. ‘புதுமைப்பெண் திட்டம்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த திட்டத்தின் தொடக்க விழா சென்னை ராயபுரத்தில் உள்ள பாரதி மகளிர் கல்லூரியில் இன்று காலை நடைபெற்றது.


விழாவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்டார். மேலும் அமைச்சர்கள் க.பொன்முடி, கீதா ஜீவன், சேகர்பாபு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் உயர் கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், 26 தகைசால் பள்ளிகளையும், 15 மாதிரி பள்ளிகளையும் தொடங்கி வைத்தார்.
பின்னர் விழாவில் பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கூறியதாவது:-
“புதுமைப் பெண் திட்டத்தால் தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சி அதிகரிக்கும், பாலின சமத்துவம் ஏற்படும், குழந்தை திருமணங்கள் குறையும். பெண்கள் அடங்கிபோகத் தேவையில்லை. ரூ.1,000 இலவசமாக வழங்கப்படவில்லை. அது அரசின் கடமை. நிமிர்ந்த நன்னடை, நேர் கொண்ட பார்வை கொண்ட பெண்களே… கல்வியின் துணை கொண்டு உலகை வென்றிட துடிக்கும் உங்களுக்கு ஒரு தந்தையின் பேரன்போடு என்றும் உடனிருப்பேன்.
நன்றாக படிக்கும் பெண்கள், திருமணத்திற்கு பின் வீட்டிற்குள் முடங்கும் சூழல் உள்ளது. இது மாற வேண்டும். தந்தைக்குரிய கடமை உணர்வுடன் பேசுகிறேன். மாணவர்களை வளர்த்தெடுக்கவே நானும், அரசும் உள்ளோம். கல்வி எனும் நீரோடை எந்த வேறுபாடுமின்றி அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் உருவானதே நீதிக்கட்சி.
நீதிக்கட்சியின் நீட்சியே திராவிட இயக்க ஆட்சி. என் வாழ்வில் மகிழ்ச்சிக்குரிய மகத்தான நாள் இன்று. பள்ளிக்கு ஒரு ஸ்மார்ட் வகுப்பறை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும். கற்றலோடு மாணவர்களின் பல்வேறு திறன்களையும் ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சமூக நீதி என்பது சலுகை அல்ல, அரசின் கடமை. பெண் கல்வி ஊக்குவிக்கப்படும் போது, சமத்துவம் நிலைக்கும்
இவ்வாறு மு,க,ஸ்டாலின் பேசினார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *