தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு மருந்து, மாத்திரைகளை கடத்த திட்டம்; அண்ணன்-தம்பி உள்பட 3 பேர் கைது
இலங்கையில் தற்போது நிலவி வரும் பொருளாதார நெருக்கடி காரணமாக உணவு, பெட்ரோல், மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் இருந்து அடிக்கடி அத்தியாவசிய பொருட்கள் சட்டவிரோதமாக கடத்தும் செயல்கள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கியூ பிரிவு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் பகுதியில் போலீசார் சோதனை மேற்கொண்டதில் இலங்கைக்கு கடத்தப்பட இருந்த பாராசிட்டமல் சிரப் 2500 பாட்டில், லேசிஸ் மாத்திரை 1 லட்சம், மெட்ரோஜெல் சிரப் 1000 பாட்டில், பிரிகேப் 1000 மாத்திரை, காண்ட்ரா கிட் 1000 உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகனேரியை சேர்ந்த ஜெயபாரதராஜா, அவரது சகோதரர் ஜெயபாரத சாரதி மற்றும் சங்கரலிங்கம் ஆகிய 3பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் மாத்திரைகளை சென்னையில் ரூ.6.5 லட்சத்திற்கு வாங்கி உள்ளதாகவும், இதன் இலங்கையின் மதிப்பு ரூ.35 லட்சம் என கூறப்படுகிறது. கடத்தலுக்கு பயன்படுத்திய 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.







