அ.தி.மு.க. தலைமையை ஏற்கும் கட்சிகளுடன் தான் கூட்டணி; கடம்பூர் ராஜூ பேட்டி
அ.தி.மு.க.அமைப்பு செயலாளர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ., கோவில்பட்டியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- தமிழக கவர்னரை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்தது பற்றி கூறுகையில் அரசியல் பற்றி பேசினோம் என்று கூறி இருக்கிறார
பதில்:- கவர்னரை மரியாதை நிமித்தம் சந்தித்ததாக கூறிய ரஜினிகாந்த் அரசியல் பற்றியும் பேசியதாகவும் கூறி இருக்கிறார், அரசியலுக்கு அப்பாற்பட்டவர் கவர்னர். அவரிடம் ரஜினிகாந்த் என்ன அரசியல் பேசினார் என்று தெரியவில்லை. அவரிடம் தான் கேட்க வேண்டும்.
கேள்வி:- ரஜினிகாந்த் அரசியலுக்கு வரக்கூடும் என்று நினைக்கிறீர்களா?
பதில்:- அவர் இன்று நேற்றல்ல 1996-ம் ஆண்டில் சட்டமன்ற தேர்தலின் போது ஜெயலலிதாவுக்கு எதிராக குரல் கொடுத்தார். பின்னர் 1998 நாடாளுமன்ற தேர்தலில் அவரது குரல் எடுபடவில்லை. அரசியலுக்கு யார்வேண்டுமானாலும் வரலாம். அவர் 3௦ ஆண்டுகளாக சொல்லிக்கொண்டு தான் இருக்கிறார். அவர் இப்போது அரசியலுக்கு வருவது போல் சொல்லவில்லை. முதலில் வரட்டும் அப்புறம் பார்க்கலாம்.
கேள்வி:- ஓ.பன்னீர்செல்வம் கட்சியுடன் இணைந்து செயல்படுவோம் என்று சொல்லி இருக்கிறாரே?
பதில்:- அப்படி சொல்லி இருக்கிறாரா? இங்கிருந்து அவரை நீக்கி விட்டோம். அவர் யாருடனும் சேர்ந்து பணியாற்றினாலும் எங்களுக்கு கவலை இல்லை. அ.தி,மு.க.வில் இருந்து அவர் நீக்கப்பட்டு விட்டார். அவரது நிலைப்பாடு பற்றி நாங்கள் கருத்து சொல்வது சரியாக இருக்காது.
கேள்வி: ஓ.பி.எஸ்., எடப்பாடி பழனிசாமி, சசிகலா, தினகரன், சீமான் மற்றும் பா.ஜனதா சேர்ந்து மெகா கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்று மோடி சொன்னதாக கூறப்படுகிறதே?
பதில்:- ஆதாரம் இல்லாத கருத்துக்கு நாங்கள் பதில் சொல்வது சரியாக இருக்காது,. தமிழ்நாட்டை பொறுத்தவரை அ.தி.மு.க.தலைமையில் தான் கூட்டணி அமைத்து போட்டியிட்டுள்ளோம். அது போல் அ.தி.மு.க. தலைமையை ஏற்கும் கட்சிகளுடன் தான் கூட்டணி அமைப்போம்.
கேள்வி:-விலைவாசி உயர்வு அதிகரித்து இருக்கிறதே?
பதில்:- விலைவாசி உயர்வு பற்றி பேசக்கூடிய இடம் நாடாளுமன்றம். தமிழ்நாட்டில் இருந்து 38 எம்.பி.க்கள் தேர்வாகி சென்று இருக்கிறர்கள்/ அவர்கள் அங்கு ஏதாவது பேசி இருக்கிறார்களா? நிதிமந்திரி அளிக்கும் விளக்கத்தை கூட கேட்காமல் வெளிநடப்பு செய்து விடுகிறார்கள்.
கேள்வி:- கோவில்பட்டியில் விமான பயிற்சி தளம் அமைக்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறி இருக்கிறாரே?
பதில்: இதனை நாங்கள் வரவேற்கிறோம். ஏற்கனவே ஹெலிகாப்டர் தளம் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு ஜெயலலிதா ஆட்சியில் கோரிக்கை வைத்தோம். காலப்போக்கில் அது நிறைவேறாமல் போய்விட்டது. இப்போது அமைச்சர் கூறி இருப்பதை செயலில் காட்ட வேண்டும்.
மேற்கண்டவாறு கடம்பூர் ராஜூ பதில் அளித்தார்.