அ.தி.மு.க.பொதுக்குழு வழக்கு விசாரணை 1௦-ந் தேதிக்கு ஒத்திவைப்பு
![அ.தி.மு.க.பொதுக்குழு வழக்கு விசாரணை 1௦-ந் தேதிக்கு ஒத்திவைப்பு](https://tn96news.com/wp-content/uploads/2022/08/download-8.jpg)
அ.தி.மு.க. பொதுக்குழு வழக்குகள் புதிதாக நியமிக்கப்பட்ட நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. சென்னை, அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான வழக்கை வேறு நீதிபதியிடம் விசாரணைக்கு பட்டியலிட வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தலைமை நீதிபதியிடம் முறையிடப்பட்டது.
இதற்கு இந்த வழக்கை விசாரிக்க இருந்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார். இந்த வழக்கு கடந்த வெள்ளிக்கிழமை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்தது./ அப்போது இந்த வழக்கை வேறு நீதிபதி விசாரணைக்கு பட்டியலிடுவது குறித்து முடிவு செய்ய இந்த வழக்கை தலைமை நீதிபதிக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி பரிந்துரை செய்தார்.
இந்த பரிந்துரையை பரிசீலித்த தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, இந்த வழக்கை நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் விசாரிக்க உத்தரவிட்டார். மேலும் வழக்கை 2 வாரத்துக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த வழக்கு புதிதாக நியமிக்கப்பட்ட நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மூத்த வழக்கறிஞர் குருகிருஷ்ண குமார் ஆஜராகவுள்ளதால் வழக்கை ஒத்திவைக்குமாறு ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அந்த கோரிக்கையை ஏற்று விசாரணையை நாளை மறுநாள் 10-ம் தேதிக்கு (புதன்கிழமை) ஒத்திவைத்து நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் உத்தரவிட்டார்.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)