காமநாயக்கன்பட்டி விண்ணேற்பு திருவிழா ஆலோசனை கூட்டம்
கோவில்பட்டி அருகே காமநாயக்கன்பட்டி புதுமை நகரில் புனித பரலோக மாதா திருத்தலம் உள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த ஆலயத்தின விண்ணேற்பு பெருவிழா வருகிற 6 -ந்தேதி தொடங்கி, 15-ந்தேதி வரை நடக்கிறது.
6 -ந்தேதி மாலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது.
திருவிழா தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
காமநாயக்கன்பட்டி திருத்தல ஆலய வளாகத்தில் உள்ள மண்டபத்தில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு, கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார். கயத்தாறு வட்டாட்சியர் சுப்புலட்சுமி முன்னிலை வகித்தார்.
திருவிழாவில் பங்கேற்கும் இறைமக்கள் மற்றும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு, போக்குவரத்து வசதி, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தருவது குறித்தும், அரசுத் துறை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டிய பணிகள், விழா காலங்களில் கடைகள் அமைத்தல் , பொழுதுபோக்கு அம்சங்கள் அமைப்பது, விபத்துக்களை தவிர்ப்பதற்கு பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் பற்றி ஆலோசிக்கப்பட்டது.
மேலும் தீயணைப்புத் துறையினரின் பணி, ஆலயத்திற்கு நடைபயணத்தில் வரும் இறைமக்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் மற்றும் அவர்கள் அணிய வேண்டிய ஒளிரும் ஒட்டுவில்லைகள் ஸ்டிக்கர் உள்ளிட்டவை குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தில், திருத்தல பங்குதந்தை அந்தோனி அ.குரூஸ், உதவி பங்குதந்தை ஜெனால்டு அ.ரீகன், அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பத்மாவதி, உதவி ஆய்வாளர்கள் ஆர்தர் ஜஸ்டின், அந்தோணி சிலுவை, துரைராஜ், தமிழ்நாடு மின்வாரிய இளநிலை பொறியாளர் முருகேசன்,
தீயணைப்பு நிலைய அலுவலர் சுந்தரராஜ், அரசு போக்குவரத்துக் கழக கிளை மேலாளர் ஜெகநாதன், சுகாதார துறையைச் சேர்ந்த பெரியசாமி, வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.