புளியங்குளம் ஊராட்சி:ஊரக வேலை வாய்ப்பு திட்ட தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம்

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டம், குருவிகுளம் பஞ்சாயத்து யூனியன், புளியங்குளம் ஊராட்சியில் மகாத்மா ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணியாற்றும் ஊரக வேலை வாய்ப்பு திட்ட பணியாளர்களுக்கு தற்போது 180 இல் இருந்து ரூ. 200 வரை சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.
குறைவாக வழங்கும் சம்பளத்தை கண்டித்தும், அரசு வழங்க உத்தரவிட்டுள்ள சம்பள விகிதத்தில் வழங்க வலியுறுத்தியும் கோரிக்கை விடுக்கபப்ட்டு வருகிறது.
மேலும்
தற்போது புளியங்குளம் ஊராட்சியில் வருடத்துக்கு சுமார் 60 நாட்கள் மட்டுமே வேலை வழங்கப்பட்டு வருகிறது. ஆகவே முழுமையாக வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஊராட்சியில் வேலை செய்யும் பணியாளர்களுக்கு ஆதாரில் பிரச்சினை உள்ளது என்று 36 பேருக்கு பணி வாய்ப்பு மறுக்கப்பட்டு உள்ளது. அவர்களுக்கு மீண்டும் பணி வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும். அத்துடன் இது போன்ற பிரச்சினைகளுக்கு காரணமான ஓவர்சியர் மீது துறை சார்ந்த நடவடிக்கை கோரி புளியங்குளம் பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.
தேசிய விவசாயிகள் சங்க தலைவர் வழக்கறிஞர் ரெங்கநாயகலு தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்துக்கு இளையரசனேந்தல் பிர்கா உரிமை மீட்பு குழு தலைவர் முருகன் முன்னிலை வகித்தார். போராட்டத்தில் மாநில ஆடு வளர்ப்போர் சங்க தலைவர் கருப்பசாமி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கோவில்பட்டி மேற்கு காவல் உதவி ஆய்வாளர் ஹரி கண்ணன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி, உரிய முறையில் நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
