கோவில்பட்டி அருகே சிவபெருமானாக காட்சி அளிக்கும் மகாதேவர் ; பிரமிக்க வைக்கும் கோவில் வரலாறு

 கோவில்பட்டி அருகே சிவபெருமானாக காட்சி அளிக்கும் மகாதேவர் ; பிரமிக்க வைக்கும் கோவில் வரலாறு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே அருள் பாலிக்கும் மகாதேவர் கோவில் பற்றியும், பிரமிக்க வைக்கும் கோவில் வரலாறு பற்றியும் இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
கோவில்பட்டி தொழில் நகரம் மட்டுமின்றி கோவில் நகரமும் கூட
இங்கு பிரசித்தி பெற்ற செண்பகவல்லி அம்மன், பத்திரகாளி அம்மன், சொர்ணமலை கதிர்வேல் முருகன் கோவில் போன்றவை உள்ளன. அந்த பட்டியலில் மகாதேவர் கோவில் இடம் பெற்றுள்ளது,
இந்த கோவில் கோவில்பட்டியில் இருந்து 9.2 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. கிராமத்து சூழலில் கேரள கட்டிடக்கலை சிறப்பை எடுத்துக்காட்டும் வகையில் கோவில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.
கோவில்பட்டியை அடுத்த இலுப்பையூரணிக்கும் கணபதிபட்டிக்கும் இடையே உள்ள சாய் அமர்நகர் டவுண்ஷிப் பகுதியில் இந்த கோவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. கடந்த 2011-ம் ஆண்டு ஜூன் மாதம் 13-ந்தேதி கோவில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

இந்த கோவிலில் மகாதேவர், சிவபெருமானாக காட்சி அளிக்கிறார். பிரதான சன்னதியில் சிவலிங்கம் வழிபாடு நடத்தப்படுகிறது. பின்புற சன்னதியில் பார்வதி தேவி அருள்பாலிக்கிறார். பக்கவாட்டில் விநாயகர் சன்னதி அமைந்துள்ளது.

நந்தியம் பெருமானுக்கு பூஜை


கோவில் உள் மண்டபத்தில் சுவாமி ஐயப்பன் உருவப்படம் வைக்கப்பட்டு பூஜை செய்யப்படுகிறது. சீசன் சமயங்களில் இங்கு அய்யப்ப பக்தர்கள் இருமுடி கட்டும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
கோவிலுக்கு வெளிப்புற மைதானத்தின் ஒரு பகுதியில் நாகர் மற்றும் இசக்கி அம்மன் சன்னதிகள் உள்ளன, மேலும் ஷீரடி சாய்பாபா தியான மண்டபம் இருக்கிறது.

நாகர் பூஜை


மகா தேவருக்கு தினமும் ஆறுகால பூஜைகள் நடக்கின்றன. காலை 7 ,மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு முதல்,இரண்டு மற்றும் உச்சிகால பூஜை முடிந்தவுடன் காலை 10 மணிக்கு நடை சாத்தபடுகிறது. பின்னர் மாலை 5.3௦ மணிக்கு நடை திறக்கப்பட்டு 3 பூஜைகள் முடிந்து இரவு 7.3௦ மணிக்கு நடை சாத்தப்படுகிறது.
இது தவிர் விசேஷ நாட்களில் பிரதோஷ பூஜை, பவுர்ணமி பூஜை, நாகர் பூஜை நடக்கிறது, ஒவ்வொரு வியாழக்கிழமையும் காலை 8 மணிக்கு சாய் பூஜை நடக்கிறது. மேலும் இங்கு ம்ருத்யுஞ்ஜய ஹோமம் நடத்தப்படுகிறது. இவை மட்டுமின்றி பக்தர்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு அளிக்ககூடிய பரிகார பூஜை தினமும் நடத்தப்படுகிறது. பக்தர்கள் உடல்நலக்குறைவு, திருமண தாமதம் போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு அவர்கள் ஜாதகத்தின் அடிப்படையில் பரிகார பூஜை செய்யப்படுகிறது.
இந்த பூஜைக்கு நேரிலோ அல்லது மொபைல்(9444024979) tதொடர்பு கொண்டு தெரிவித்தாலும் இந்த பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது. இதற்கு குறைந்த காணிக்கை தொகை வசூலிக்கப்படுகிறது, கோவிலில் சுவாமி தரிசனம் முடித்தவுடன் சாய்பாபா தியான மண்டபத்தில் அமர்ந்து தியானம் செய்யலாம்,

விளக்கு பூஜை


ஒவ்வொரு பூஜை முடிந்தபிறகும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது, கோவிலில் கடைபிடிக்கப்படும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பக்தர்கள் தரிசனம் செய்துவிட்டு செல்கிறார்கள்.
கோவில்பட்டி மட்டுமின்றி தொட்டிலோவன்பட்டி, இலுப்பையூரணி, திட்டங்குளம்பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். கேரளாவில் இருந்தும் பக்தர்கள் வருகிறார்கள்.

பிறந்த குழந்தைக்கு சோறு ஊட்டும் நிகழ்ச்சி இந்த கோவிலில் செய்யலாம் என்பது மேலும் ஒரு சிறப்பு இந்த கோவிலுக்கு உண்டு. குருவாயூர் கோவிலில் செய்யப்படுவதை போல் தாய்-தந்தையை கோவில் வாசலில் அமரவைத்து குழந்தைக்கு சோறு ஊட்டும் வைபவம் நடத்தப்படுகிறது. முன்கூட்டியே கோவிலில் சொல்லிவிட்டால் நிர்வாகத்தினர் எல்லா ஏற்பபாடுகளையும் செய்து விடுகிறார்கள்.

குழந்தைக்கு சோறு ஊட்டுதல்

குறிப்பிட்ட நேரத்தில் தவறாமல் சென்றுவிடவேண்டும். செல்லும்போது இலை மற்றும் வெற்றிலை மட்டும் வாங்கி வர சொல்கிறார்கள். குழந்தைக்கு சோறு ஊட்டும் நிகழ்ச்சி முடிந்தவுடன் சிவன் சன்னதிக்கு முன்பு குழந்தையை படுக்க வைத்து ஆசி பெற செய்து பிரசாதம் வழங்கி அனுப்பி வைக்கிறார்கள்.

இந்த கோவிலுக்கு முதன்முறையாக செல்லும் பக்தர்கள் கோவில்பட்டி அருகே இப்படி ஒரு கோவிலா? என்று ஆச்சரியத்தில் மூழ்கி விடுவது நிச்சயம். அதே சமயம் இந்த கோவில் வரலாறை தெரிந்து கொள்ளும்போது பிரமித்து போவார்கள்.
பக்தர்கள் வருகை அதிகம் காரணமாக பிரபலமாகி வரும் இந்த கோவில் அமைய முக்கிய காரணமாக இருந்தவர் கே.ஆர்.பி.சுரேஷ். இவர் கோவில் நிர்வாகத்தையும் கவனித்து வருகிறார்.

கே.ஆர்.பி.சுரேஷ்


ரெயில்வே காண்டிராக்டராக இருந்த இவர் கோவில்பட்டியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்ய முன்வந்தார். அவர் தற்போது கோவில் அமைந்துள்ள இடத்தை வாங்கி வீட்டுமனைகள் ஆக்கி விற்க திட்டம் வகுத்தார். அப்போது அந்த பகுதியில் பெரிய வில்வ மரம் இருந்ததை கண்டார். மேலும் பாம்புகள் நடமாட்டம் அதிகம் காணப்பட்டது, இதனால் இந்த இடம் சிவனின் அருள் இருக்கும் இடம் என்பதால் அவரது எண்ணம் எஸ்டேட் தொழிலை ஒதுக்கி வைத்து விட்டு ஆன்மிகத்தில் கலந்தது.
எட்டயபுரம் அருகே சிந்தலக்கரை என்ற ஊரில் வசித்த சிவா பக்தர் ஒருவரை அப்பகுதி மக்கள் சிவயோகி என்று அழைத்து வந்தனர். அவர் ஒரு தடவை பாதயாத்திரை சென்றபோது தற்போதைய சாய் நகரில் சிவனின் தெய்வீக சக்தி இருப்பதை உணர்ந்தார். இதனால் அங்கேயே சில நாட்கள் தங்கி சென்றதாக வரலாற்று கதைகளில் சொல்லப்பட்டுள்ளது,
சாய் அமர் நகரில் தெய்வீக சக்தி இருப்பதை உணர்ந்த சிவயோகி, அங்கேயே சில வழிபாடுகளை தொடர்ந்தார். அப்போது அங்கு வசித்த மக்கள் தேவி வழிபாடு செய்து வந்தனர், தேவி வழிபாடு செய்தால் எல்லா நன்மைகளும் வந்து சேரும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு உண்டாகி இருந்தது,
அதனால் சிவனின் தெய்வீக சக்தியை அவர்கள் உணரவில்லை. சிவனும், பார்வதியும் உலகை வலம் வந்தபோது இலுப்பையூரனியில் தங்கி சென்றதாக வரலாற்று கதைகளில் சொல்லப்பட்டுள்ளது,
சிவயோகி, ஜீவசமாதி அடைந்த பிறகு மக்களின் தெய்வீக நம்பிக்கை குறைந்து போயிற்று. அதனால் துர்மந்திரவாதங்கள் அதிகரித்தன, ஊரில் பஞ்சம், நோய்கள் உண்டாகி மக்களை வாட்டி வதைத்தது. இதனால் மக்களிடம் அமைதியின்மை ஏற்பட்டது, இந்த நிலை எதனால் என்று அஷ்டமங்கள தேவ பிரசன்னம் பார்த்த போது தெய்வ கோபத்திற்கு ஆளாகி இருப்பது தெரியவந்தது.
திருவனந்தபுரம் ஜோதிடர் வி.ஜி.பணிக்கர் தெரிவித்த பரிகாரம் சிவன், பார்வதி, விநாயகர், நாக தெய்வங்கள், இசக்கி அம்மன், ஷீரடி சாய்பாபா ஆகிய தெய்வங்களுக்கு கோவில் கட்டி வழிபாடு செய்யவேண்டும் என்பதாக இருந்தது,
இதன் காரணமாகவே இந்த கோவில் எழுப்பபட்டதாக கோவில் நிர்வாகி கே.ஆர்.பி,சுரேஷ் தெரிவித்தார்.

அய்யப்ப பக்தர்கள் இருமுடி கட்டுதல்

கேரள மாநிலம் அம்பலப்புழை ஸ்ரீதரன் நம்பூதிரி, கோவில் கும்பாபிஷேகத்தை நடத்தினார். கோவில் வடிவமைப்பு செய்தவர் கருநாகப்பள்ளி ஆதிநாடு ஸ்தபதி வி.கே.மாதவன் குட்டி ஆச்சாரி ஆவார். கருநாகம்பள்ளி ஆர்.சிஜி நீலிக்குளம் தலைமையிலான குழுவினர் இக்கோவிலை கட்டினர்.
கோவில் மைதானத்துக்குள் நிழல் தரும் மரங்கள் நிறைய உள்ளன. மலர்ச்செடிகள் பூத்து குலுங்குகின்றன, இயற்கையான அமைதியான சூழலில், சுற்றுப்புற சுகாதாரத்துடன் இந்த கோவில் காட்சி அளிக்கிறது.
கோவில் வாசலில் இருபுறமும் மலர்ச்செடிகள் மரமாக பூத்து குலுங்குவது சிறப்பு. இந்த கோவிலின் அன்றாட பூஜைகளை நம்பூதிரி ராஜேஷ் செய்து வருகிறார்.
கோவில்பட்டிக்கு மிக அருகாமையில் மகா தேவராக அருள்பாலிக்கும் சிவபெருமானை அனைவரும் வழிபட்டு அருள் பெற்று செல்லவேண்டும் என்று கோவில் நிர்வாகி கே.ஆர்.பி,சுரேஷ் கேட்டுக்கொண்டுள்ளார்.
(கட்டுரை: S.K.T.S. திருப்பதிராஜன்)

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *