• April 27, 2024

ஆண்களுக்கு வேலைமறுப்பு: கிராம மக்கள் முற்றுகை போராட்டம்

 ஆண்களுக்கு வேலைமறுப்பு: கிராம மக்கள் முற்றுகை போராட்டம்

கோவில்பட்டியை அடுத்த இளையரசனேந்தல் கிராமத்தில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் ஆண்களுக்கு வேலை கொடுக்க மறுப்பதை கண்டித்தும், இந்த திட்டத்தில் ஆண்களுக்கு வேலை கொடுக்க வலியுறுத்தியும் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தை கிராம மக்கள் இன்று காலை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டத்திற்கு தேசிய விவசாயிகள் சங்க தலைவர் வக்கீல் ரெங்கநாயகலு தலைமை தாங்கினார். கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம மக்கள் கோஷங்கள் எழுப்பினர். பின்னர் கோட்டாட்சியர் மகாலட்சுமியை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-


குருவிகுளம் பஞ்சாயத்து யூனியனில் அடங்கிய இளையரசனேந்தல், கொடப் பாறை, அய்யம்பட்டி, லட்சுமியம்மாள் புரம் கிராமங்களை சேர்ந்த 1,286 பேர் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணியாற்றி வருகின்றனர்.
இதில் இளையரசனேந்தல் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஆண்களுக்கு வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டது. இதற்கு பணித்தள பொறுப்பாளர்களும், அவர்களுக்கு உடந்தையாக ஓவர்சியர், எழுத்தர் ஆகியோர் இருப்பதாகவும் கூறப்படுகிறது,

இந்த பணியில் ஈடுபடுபவர்களுக்கு தினமும் கூலியாக ரூ.150 மட்டும் கொடுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் கடந்த மே மாதம் கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதை தொடர்ந்து புகாருக்கு உள்ளான பொறுப்பாளர்கள் ஆண்களுக்கு வேலை தர மறுத்து வருகின்றனர்.

இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி, அந்த திட்டத்தில் ஆண்களுக்கு வேலைதர மறுக்கும் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், ஆண்களுக்கு உடனடியாக வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’,
இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.
மனுவை பெற்றுக்கொண்ட கோட்டாட்சியர், மகாலட்சுமி, சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம், புகார் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *