நேரடி உதவி ஆய்வாளர் பதவிக்கான எழுத்து தேர்வு; தூத்துக்குடியில் 7 மையங்களில் நடக்கிறது
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் 2022ம் ஆண்டிற்கான நேரடி உதவி ஆய்வாளர் பதவிக்கு வரும் 25.6.2022 மற்றும் 26.6.2022 ஆகிய 2 நாட்கள் எழுத்து தேர்வு அறிவித்துள்ளது. இந்த தேர்வு முதன்மை எழுத்து தேர்வு மற்றும் தமிழ்மொழி தகுதி தேர்வு என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி 25.6.2022 அன்று காலை பொதுப்பிரிவினருக்கான முதன்மை எழுத்து தேர்வில் 1377 பெண் விண்ணப்பதாரர்கள் உட்பட 6400 பேர் தேர்வு எழுத உள்ளனர். 25.6.2022 அன்று மதியம் தமிழ் மொழிக்கான தகுதி தேர்வு அனைவருக்கும் பொதுவானது என்பதால் பொது ஒதுக்கீடு மற்றும் காவல்துறையினருக்கான ஒதுக்கீடுகளில் விண்ணப்பித்த 1459 பெண் விண்ணப்பதாரர்கள் உட்பட 6965 பேர் தேர்வு எழுத உள்ளனர்.
அதே போன்று மறுநாள் (26.6.2022) அன்று காலை காவல்துறையினருக்கான ஒதுக்கீட்டின்படி விண்ணப்பித்த 104 பெண் விண்ணப்பதாரர்கள் உட்பட 705 பேர் முதன்மை எழுத்து தேர்வு எழுத உள்ளனர்.
மேற்படி நேரடி உதவி ஆய்வாளர் பதவிக்கான எழுத்து தேர்வு தூத்துக்குடி மாவட்டத்தில் பி.எம்.சி. மெட்ரிகுலேசன் பள்ளி, காரப்பேட்டை நாடார் மெட்ரிக் பள்ளி, காமராஜ் கல்லூரி, இன்னாசிபுரம் புனித தாமஸ் மேல்நிலை பள்ளி, புனித மேரியன்னை மகளிர் கல்லூரி, புனித பிரான்ஸிஸ் சேவியர் மேல்நிலை பள்ளி மற்றும் சுப்பையா வித்யாலயா பெண்கள் மேல்நிலை பள்ளி ஆகிய 7 மையங்களில் நடைபெற உள்ளது.
இதில் புனித மரியன்னை மகளிர் கல்லூரி மற்றும் சுப்பையா வித்யாலயா பெண்கள் மேல்நிலை பள்ளி ஆகிய இடங்களில் பெண் தேர்வர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து பி.எம்.சி மெட்ரிகுலேசன் பள்ளி, சுப்பையா வித்யாலயா பெண்கள் மேல்நிலை பள்ளி, காமராஜ் கல்லூரி உட்பட அனைத்து தேர்வு மையங்களுக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் இன்று (23.6.2022) நேரில் சென்று தேர்வு எழுதுவதற்கான ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வுகளின் போது தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர் கண்ணபிரான், காவல் அமைச்சு பணி நிர்வாக அதிகாரி ஆறுமுகம், ஆயுதப்படை காவல் ஆய்வாளர் சுடலைமுத்து, நிர்வாக அலுவலக கண்காணிப்பாளர் மாரியப்பன், உதவியாளர் ஆறுமுகம் உட்பட காவல்துறையினர் உடன் இருந்தனர்,