• February 7, 2025

அ.தி.மு.க.வில் சர்வாதிகார போக்கு; ஓ.பன்னீர்செல்வம் `டுவிட்’

 அ.தி.மு.க.வில் சர்வாதிகார போக்கு; ஓ.பன்னீர்செல்வம் `டுவிட்’

ஒற்றை தலைமை விவகாரத்தில் கடும் அதிருப்தியில் உள்ள அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், தொடர்ந்து தனது ஆதரவாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். அதேவேளை அவரை சமாதானப்படுத்த அக்கட்சி முன்னாள் அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் அசராமல் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தர்மம் மறுபடியும் வெல்லும் என்று டுவீட் செய்து உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
மாபெரும் மக்கள் இயக்கமாம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் தற்போது நிலவிவரும் சர்வாதிகார மற்றும் அராஜகப் போக்கிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மகளிர் அணியினர் அம்மா நினைவிடத்திற்கு சென்றபோது, தேனாம்பேட்டை வரதராஜபுரம் பகுதியை சேர்ந்தவரும், தென்சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட கழக இணைச் செயலாளருமான கேசவன் தீக்குளிக்க முயன்றதாக வந்துள்ள செய்தி எனக்கு மிகுந்த மன வேதனையை அளிக்கிறது.
இதுபோன்ற விபரீதமான செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என கழகத் தொண்டர்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இந்த தருணத்தில், “தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்; தருமம் மறுபடியும் வெல்லும்” என்பதை இங்கு சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *