அ. தி. மு. க. வில் ஒற்றை தலைமை விவகாரத்தில் விரைவில் சுமுக முடிவு -டி. ஜெயக்குமார்
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவில் வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் இன்று பகலில் ஆஜராகி கையெழுத்திட்டார். அதன் பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு :-
கேள்வி:-அதிமுக வில் ஒற்றைத் தலைமை குறித்து….
பதில்: காலத்தின் கட்டாயம். அதாவது காலம்தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கும். பொதுவாக அடிமட்டத் தொண்டர்கள், மாவட்டச் செயலாளர்கள், கழக நிர்வாகிகள் ஆகியோர்களின் எண்ணம் ஒற்றைத் தலைமை என்ற கருத்துள்ளது. அது தற்போது பிரதிபலிக்கப்பட்டுள்ளது. இதில் எந்தவிதமான உள்நோக்கமும் கிடையாது. நானும் யாரையும் குறிப்பிட்டு கூறவில்லை. இது சம்மந்தமாக பொதுக்குழுதான் முடிவு செய்யும். பொதுக்குழு திட்டமிட்டப்படி நடைபெறும். ஒரு சுமூகமான முடிவு ஏற்படும். என்னைப் பற்றி தவறான கருத்துக்களை சிலர் கூறுகிறார்கள். நான் எத்தனையோ பதவிகளை பார்த்துள்ளேன். எனக்கு பதவி ஆசை என்பது இல்லை. இதயதெய்வம் அம்மா அவர்களின் மறைவிற்கு பின்பு 2017 ஆம் ஆண்டு நிதித்துறை என்னிடம் இருந்தது. அதை கேட்டார்கள். அதனை விட்டுக்கொடுத்தேன். அந்த சமயத்தில் நான் எந்தவித கோரிக்கையும் வைக்கவில்லை. இதிலிருந்தே நீங்கள் தெரிந்துகொள்ளலாம் பதவிக்கு ஆசைப்படுகிறவன் நான் அல்ல. எனக்கு கட்சிதான் முக்கியம். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., இதயதெய்வம் அம்மா ஆகியோரின் எண்ணப்படி அடிமட்டத் தொண்டன் முதல் நாங்கள் வரை கருணாநிதியின் குடும்ப அரசியலை ஒழிப்பதைதான் கொள்கையாக கொண்டுள்ளோம். அந்தப் அடிப்படையில் கட்சிதான் எங்களுக்கு முக்கியம். பதவி என்பது முக்கியம் கிடையாது. நான் எந்த பதவிக்கும் ஆசைப்படவில்லை. கட்சி எடுக்கும் எந்த முடிவுக்கும் நான் கட்டுப்படுவேன்.
கேள்வி:- உடன்பாடு எதுவும் ஏற்படாமல் பிரச்சினை வலுத்துக்கொண்டே இருக்கிறதே?
பதில்-: ஒரு கருத்து பேசப்பட்டு அதற்கான செயல்வடிவம் கொடுப்பதற்கான முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. எல்லாம் சுமுகமாக நடைபெறும். இந்த கருத்துக்கள் அங்கு பேசப்பட்டன, சொல்லப்பட்டன, வலியுறுத்தப்பட்டன. இந்த விஷயத்தில் எனக்கென்று தனிப்பட்ட கருத்து எதுவும் கிடையாது. இதில் வலியுறுத்தப்பட்டதுதான் முக்கியம் ஆகும். அதனை உதாசீனப்படுத்திட முடியாது. அதற்கு ஒரு செயல்வடிவம் கொடுப்பது என்பது ஒரு அடுத்தக்கட்ட நடவடிக்கையாகும்.
தொண்டர்கள், மாவட்டச் செயலாளர்கள், கழக நிர்வாகிகள் தலைமைக் கழகத்தில் தெரிவித்த கருத்தினைதான், நான் இங்கு தெரிவித்தேன். இதில் தவறு ஏதும் இல்லை. மற்றப்படி எவரையாவது நான் குறிப்பிட்டு சொல்லியிருந்தால் அது தவறாகும். நான் அப்படி எதுவும் சொல்லவில்லை. இதயதெய்வம் அம்மா அவர்களின் மறைவிற்கு பின்பு முதலமைச்சர் வேட்பாளர், எதிர்கட்சித் தலைவர் என எத்தனையோ பிரச்சினைகள் வந்தன. அவையெல்லாம் சுமுகமாக முடிந்தது. அதேபோலத்தான் இதற்கும் நல்ல முடிவு ஏற்படும். அது பொதுக்குழு மூலம் எடுக்கப்படும்.
கேள்வி:-சசிகலா கட்சிக்கு வருவார்களா?
பதில்:- அவங்க (சசிகலா) கட்சிக்கு சம்பந்தம் இல்லாதவங்க. அவர்களைப் பற்றி எதுவும் பேச நான் விரும்பவில்லை.
கேள்வி:- ஓ.பி.எஸ். எனது நண்பர். அவரது மனம் வருத்தப்படாத அளவிற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளாரே?
பதில்:- ஆடு நனைகிறதே என்று ஓணாய் அழுதது என்பது போல்தான் இது இருக்கிறது. கசாப்புக் கடைக்காரன் சரியான நேரத்தை பார்த்துக்கொண்டிருப்பது போலவாகும் இது.
கேள்வி:- அதிமுக வியாபார நோக்கோடு நடைபெறுகிறது என்கிறாரே டிடிவி தினகரன்.
பதில்:- அவர் (டிடிவி தினகரன்) ஒரு அரசியல் வியாபாரி. அவரது எண்ணத்தை பிரதிபலித்திருக்கிறார்.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பதில் அளித்தார்.