சசிகலாவை அ.தி.மு.க.வில் சேர்க்கும் பேச்சுக்கே இடமில்லை; டி.ஜெயக்குமார் திட்டவட்டம்
சென்னை மாநகர காவல் ஆணையர் வளாகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கோர்ட்டு உத்தரவுப்படி இன்று ஆஜராகி கையெழுத்திட்டார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- அ.தி.மு.க. கொடியை நான் பயன்படுத்தக்கூடாது என்று சொல்வதற்கு யாருக்கும் உரிமை கிடையாது என்று சசிகலா தெரிவித்துள்ளாரே?
பதில்.:- வடிவேல் படத்தில் ஒரு டயலாக் வரும். திரும்பத் திரும்ப பேசர. திரும்ப திரும்ப பேசர என்று ஒரு வசனம் வரும். எங்களுக்கும் சொல்லி,சொல்லி புளித்துப் போய்விட்டது. அவர்களும் இதனை ஒயாமல் சொல்லி வருகிறார்கள். தேர்தல் ஆணையம், டெல்லி உயர்நீதிமன்றம் தெளிவான தீர்ப்பை வழங்கியுள்ளது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்றார்கள். அவர்களும் தெளிவான தீர்ப்பை வழங்கினார்கள். தற்போது சிட்டி சிவில் கோர்ட்டுக்கு சென்றார்கள். அவர்களும் நார்கள்தான் கட்சி என்று தீர்ப்பு வழங்கிவிட்டார்கள்.
கட்சி கொடியைப் பயன்படுத்தக்கூடாது என்று ஒரு புகார் மாம்பலம் காவல்நிலையத்தில் அளிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு தற்போது சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு,நீதிமன்ற உத்தரவை மீறும் விஷயம் போன்றவற்றை நீதிமன்ற அவமதிப்பாகத்தான் கருத முடியும். அவருடைய கருத்தை மக்களும், அவரது கட்சியை சேர்ந்தவர்களும் யாரும் பொருட்படுத்துவதாக இல்லை.
இதனை உதாசினப்படுத்தக்கூடிய கருத்தாகத்தான் எல்லோரும் பார்ப்பார்கள். இது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தாது. அ.ம.மு.க.விலிருந்து அனைவரும் இங்கு வந்துகொண்டிருக்கிறார்கள். இன்றும் 4 பேர் அங்கு உள்ளார்கள். அவர்களும் விரைவில் வந்துவிடுவார்கள். கட்சியே அங்கு இருக்காது. தொண்டர்கள் இல்லாமல்,மக்கள் ஆதரவு இல்லாமல்,சசிகலாவைப் பொறுத்தவரையில் பணத்தை வைத்து அரசியல் செய்யலாம் என்று நினைக்கிறார். அந்த குடும்பத்தைத் தவிர அனைவரும் இங்கு வந்துவிடுவார்கள். சசிகலாவை சேர்க்கும் பேச்சுக்கே இடமில்லை. இரட்டை இலையை எதிர்த்து நின்று,கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுப்பட்டு, தமிழக மக்கள் விரும்பாத ,தொண்டர்கள் விரும்பாத சக்தி சசிகலா. அந்த தீய சக்தியை எந்த நிலையிலும் கழகத்தில் சேர்ந்துகொள்ளக் கூடாது என்பதுதான் நிலைப்பாடு.
கேள்வி:- சமீபத்தில் பேசிய பா.ஜ.க. சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் ஒருவேளை சசிகலா பா.ஜ.க. வந்தால் வரவேற்போம் என்று தெரிவித்துள்ளாரே?
பதில்:- அவர்கள் வேண்டுமென்றால் சேர்த்துக்கொள்ளட்டும். இதற்கு அண்ணாமலை தெளிவாக பதில் அளித்துள்ளார். அவர்கள் கட்சியில் உள்ள சில குழுக்கள் இதுகுறித்து முடிவு எடுப்பார்கள் என்று தெரிவித்துள்ளார். சசிகலாவைச் சேர்த்து கொள்வதா இல்லையா என்பது அவர்கள் முடிவு செய்யவேண்டிய விஷயம். இதில் நான் என்ன கருத்துச் சொல்ல முடியும்.
கேள்வி:- ஸ்ரீபெரும்புதூர் அருகே புகார் அளித்த வந்த பொதுமக்கள் மீது அமைச்சர் தா,மோ.அன்பரசன் அடிக்க கையை ஒங்கி இருக்கிறார்…
பதில்:- தி.மு.க. அமைச்சர்களை பொறுத்தவரையில் பொதுமக்களின் எண்ணங்களை உதாசினப்படுத்தி. அவமதிப்பு செய்வதுதான் அவர்களின் வேலை. எங்கள் ஆட்சியில் புரட்சித்தலைவர் காலத்திலிருந்து காவல்துறையில் எந்த தலையீடும் இருந்தது கிடையாது. காவல்துறை தன்னுடைய கடமையை சுதந்திரமாக செய்யும். என் மீது அரசியல் அழுத்தம் காரணமாகத்தான் நில அபகரிப்பு வழக்கு போட்டூள்ள்ளார்கள்.
கேள்வி;- ஆன்லைன் ரம்மியால் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். அ.தி.மு.க. ஆட்சியில் தடைசெய்யப்பட்டது. இப்போது இது தொடர்பாக அரசுக்கு உங்களுக்கு வலியுறுத்தல் என்ன?
பதில்:- ஆன்லைன் ரம்மி ஒரு சமூக சீர்கேடு. இதனை ஒழிக்கவேண்டும் என்றுதான் நாங்கள் சட்டம் இயற்றி நடவடிக்கை எடுத்தோம். தி.மு.க. ஆட்சியில் இதனை ஊக்குவிக்கிறார்கள். இதனை ஒழிப்பதில் உங்களுக்கு என்ன பிரச்சினை உள்ளது. இதனால் எத்தனை உயிர்கள் பறிக்கப்படுகிறது. ஏன் இதனை ஒழிக்கவில்லை. இதுதான் தமிழக மக்களின் கேள்வி.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.