காற்றாலை இறக்கை ஏற்றி வந்த லாரி மீது சரக்கு வாகனம் மோதியது; 12 பெண்கள் மருத்துவமனையில் அனுமதி


தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே அழகுநாச்சியார் புரத்தில் இருந்து இன்று காலை தூத்துக்குடி அருகே உள்ள குறுக்குசாலையில் நாற்று அறுப்பு பணிக்காக 12 பெண்கள் சரக்கு வாகனத்தில் அழைத்து வரப்பட்டனர். இந்த வாகனத்தை அதே ஊரைச் சேர்ந்த சின்னகுருசாமி மகன் காளி மகராஜன் என்பவர் ஓட்டி வந்தார்.
இந்த வாகனம் எப்போதுவென்றான் பாலம் அருகே வந்தபோது முன்னால் காற்றாலை இறக்கைகளை ஏற்றி வந்த லாரியை முந்தி செல்ல முயன்றபோது அவ்வழியே வந்த டிராவல்ஸ் வேன், சரக்கு வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் சரக்கு வாகனத்தில் வந்த டிரைவர் மற்றும் வள்ளியம்மாள் (49), கிறிஸ்டியம்மாள் உட்பட 12 பெண்கள் காயம் அடைந்தனர்.
அவர்கள் அனைவரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் காற்றாலை இறக்கை ஏற்றி வந்த வாகனத்தில் பாதுகாப்பு பணிக்காக வந்த 2 ஊழியர்கள் காயம் அடைந்தனர். அவர்கள் எப்போதும் வென்றான் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றனர். விபத்து குறித்து எப்போதும் வென்றான் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


