காந்திகிராம கஸ்தூரிபா மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் கவுசல்யா தேவி காலமானார்

திண்டுக்கல்லை அடுத்துள்ள காந்திகிராம நிறுவனங்களில் ஒன்றான கஸ்தூரிபா மருத்துவமனையில் சுமார் 60 ஆண்டு காலம் மருத்துவராக பணி செய்த டாக்டர் கவுசல்யா தேவி (வயது 95) வயது மூப்பின் காரணமாக நேற்று மதியம் இயற்கை எய்தினார்.
தூத்துக்குடிமாவட்டம்,விளாத்திக்குளத்தை அடுத்த அருணாசலபுரத்தை பூர்வீகமாக் கொண்ட இவர், சென்னை மருத்துவக் கல்லூரியில்1959-ஆம் ஆண்டு டாக்டர் பட்டப்படிப்பை முடித்தார்.
இதைத் தொடர்ந்து, நாகப்பட்டினம், கோபிச்செட்டிப்பாளையம், சங்கரன் கோவில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றினார். காந்திகிராம நிறுவனர் டாக்டர் சவுந்திரத்தின் சேவை அறிந்து அரசு வேலையை விட்டு கஸ்தூரிபா மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவராக பணியை தொடங்கினார்.
மகப்பேறு மருத்துவத் துறையில் பல்வேறு மகத்தான சேவைகளை செய்த டாக்டர் கவுசல்யா தேவி, மக்கள் மருத்துவர் என மக்களால் புகழப்பட்டார்.. காந்திகிராமம் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலராகவும் சமூகப் பணியையும் மேற்கொண்டார். இவரின் மருத்துவ சேவைக்காக பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.
சமூகப் பணிகளுக்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த கவுசல்யாதேவி, ரத்னா விருது, ஆர்.ஆர். கேய்தான் தங்கப் பதக்கம், அறம் விருது, ராணி மெய்யம்மை ஆச்சி விருது உள் ளிட்ட விருதுகளையும் பெற்றவர்.
கஸ்தூரிபா மருத்துவமனை வளாகத்திலுள்ள அவரது இல்லத்தில் கவுசல்யாதேவியின் இறுதிச் சடங்கு, இன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெறுகிறது.
கஸ்தூரிபா மருத்துவமனை டாக்டர் கவுசல்யா தேவி மறைவுக்கு தமிழக ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் இ. பெரியசாமி விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-
திண்டுக்கல் மாவட்டம், காந்திகிராமம் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் மற்றும் கஸ்தூரிபாய் மருத்துவமனையின் மகப்பேறு மகுத்துவரும், தமிழகத்தின் நடமாடும் அன்னை தெரேசாவாக வாழ்த்து. சேவையின் சிகரமாக வாழ்ந்து மறைந்த பெருமரியாதைக்கும். மதிப்பிற்குரியவருமான மருத்துவர். அன்னை கௌசல்யா தேவி மறைவு செய்தியறிந்து மிகவும் வேதனையுற்றேன்.
எளிமையின் இலக்கணமாக வாழ்ந்து, சேவையே தனது முழு வாழ்க்கையாக அர்ப்பணித்துக் கொண்டவர். சமூக சேவக்காக பல்வேறு விருதுகளைப் பெற்றவர். அன்னை மருத்துவர் கவுசல்யா தேவி அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் காந்திகிராமம் அறக்கட்டளை நிர்வாகத்தினர் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்”.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்
திண்டுக்கல் தொகுதி மக்களவை உறுப்பினர் இரா.சச்சிதானந்தம் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.


