கோவில்பட்டியில் தெப்பதிருவிழா; தெப்பத்தில் 9 முறை சுற்றிவந்த புஷ்பரதம்


கோவில்பட்டி செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாத சுவாமி கோவில் பங்குனிப் பெருந்திருவிழா கடந்த, 5-ந் தேதி தொடங்கியது.
தொடர்ந்து தினமும் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மாலை வேளையில் சுவாமி -அம்பாள் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
விழாவின் சிகர நிகழ்ச்சியாக 13-ந்தேதி தேரோட்டம், 14-ந்தேதி தீர்த்தவாரி முடிந்து இன்று செவ்வாய்க்கிழமை தெப்ப திருவிழா நடைபெற்றது.
காலை 10 மணியளவில் கோவிலில் சுவாமி அம்பாளுக்கு விசேஷ அபிஷேகம், தீபாராதனை நடந்தது.மாலை 6. மணியளவில் அலங்கரிக்கப்பட்ட ரிஷப வாகனங்களில் சுவாமி- அம்பாள் கோவில்பட்டி நாடார் உறவின் முறை சங்கத்திற்கு சொந்தமான அடைக்கலம் காத்தான் மண்டபத்திற்கு வந்து தீபாராதனை நடைபெற்றது.
.அதன்பின் செண்பகவல்லி அம்பாள் கோவில் தெப்பத்திற்கு எழுந்தருளல் நடைபெற்றது தெப்பத்தில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட புஷ்பரதத்தில் செண்பகவல்லி அம்பாளும் பூவனநாத சுவாமியும் உலா வருதல் நடந்தது.
தெப்பத்தில் 9 முறை புஷ்பரதம் சுற்றி வந்தது. ஏராளமான பக்தர்கள் கூடி இருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
