“சீன லைட்டர்களை இந்தியாவில் முழுவதுமாக தடைசெய்ய வேண்டும்”; மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி பொதுக்குழு வலியுறுத்தல்

மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணியின் பொதுக்குழுக் கூட்டம், சென்னை, எழும்பூரில் உள்ள மதிமுக தலைமைக் கழகம் தாயகத்தில் இன்று காலை நடைபெற்றது.
மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணியின் தலைவர் ஆவடி இரா.அந்திரிதாஸ் தலைமை தாங்கினார். கழகப் பொதுச்செயலாளர் வைகோ எம்.பி., சிறப்புரை ஆற்றினார்.
கழக அவைத் தலைவர் ஆடிட்டர் அர்ஜூனராஜ், பொருளாளர் மு.செந்திலதிபன், முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி., துணைப் பொதுச்செயலாளர்கள் மல்லை சத்யா, செஞ்சி ஏ.கே.மணி, ஆடுதுறை இரா.முருகன், தி.மு.இராசேந்திரன், டாக்டர் ரொஹையா ஆகியோர் உரையாற்றினார்கள். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:-
* ஒன்றிய அரசின் நாசகார தொழிலாளர் நல சட்டங்களை திருத்தும் செயலை இப்பொதுக்குழு வன்மையாக கண்டிக்கிறது. ஒன்றிய அரசு அதை முற்றிலுமாக கைவிட வேண்டும்.
*) நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டு வரும் ஒப்பந்தமுறையிலான வேலை வாய்ப்பு திட்டத்தை கைவிட்டு, நிரந்தர வேலை வாய்ப்பை வழங்கிட வேண்டும்.
*ராணுவம், ரெயில்வே, வங்கி, இன்சூரன்ஸ், தபால், மின்சாரம் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் தனியாரை அனுமதிக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும்.
*ஓய்வூதியம் என்பது ஒருவரின் அடிப்படை உரிமை மட்டுமல்ல, அது ஒரு சமுதாய அந்தஸ்து. எனவே பங்களிப்பு ஓய்வூதியம், ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை (NPS) ரத்து செய்து, பழைய ஓய்வூதியதிட்டமே தொடர வேண்டும்
*ராணுவத்தில் ஒப்பந்த முறையில் வீரர்களை பணிக்கு அமர்த்தும் அக்னிபாத் நடைமுறை கைவிடப்படவேண்டும்

*ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு 2015 நவம்பர் முதல் வழங்க வேண்டிய பஞ்சப்படியை நிலுவைத்தொகையுடன் வழங்கிடுக.
* 2023 ஜூன் மாதம் முதல் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு இதுவரை பணப்பயன் எதுவும் வழங்கப்படவில்லை. அவர்களுக்குச் சேரவேண்டிய பணப்பயனை உடனடியாக வழங்க வேண்டும்.
*வாரிசுதாரர்களுக்கு கல்வித் தகுதியின் அடிப்படையில் பணி வழங்கிட வேண்டும்,.
* தீப்பெட்டித் தொழிலுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக உள்ள, தீப்பெட்டி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கின்ற வகையில் உள்ள சீன லைட்டர்களை இந்தியாவில் முழுவதுமாக தடை செய்திட வேண்டும் .
* தூத்துக்குடி மாவட்டம், எட்டையபுரத்தில் உள்ள பாரதி கூட்டுறவு நூற்பாலையின் ஒப்பந்தத் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும். இனி வரும் நாட்களில் ஒப்பந்தப் பணி முறையை அனுமதிக்கக் கூடாது
*கட்டுமான தொழிலில் பணியாற்றும் பெண் தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய வயது வரம்பை 55ஆக குறைத்து அமல்படுத்திட வேண்டும்.

